என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள்.
    X
    கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள்.

    புதுக்கோட்டையில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேர் கைது

    புதுக்கோட்டையில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் கீழ 3-ம் வீதி பெருமாள் கோவில் அருகே உள்ள சந்தையில் காய்கறிகள் வாங்க வந்த 3 பேர், ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்து சென்றதாக கணேஷ்நகர் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் போலீசார் நேற்று காலை கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் புதுக்கோட்டை கே.எல்.கே.எஸ்.நகரை சேர்ந்த ஜெயராஜ் (வயது 52), பனையப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் (53), காந்திநகர் 6-ம் வீதியை சேர்ந்த வேலு (50) ஆகியோர் என தெரிந்தது. மேலும் ஜெயராஜ் கள்ளநோட்டுகளை அச்சடித்து பழனியப்பன், வேலு ஆகியோர் மூலம் மாற்ற முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜெயராஜ், புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை வாங்கி வந்து புதுக்கோட்டையில் அரசு மதுபான கடை பார்களுக்கு வினியோகம் செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைதானவர். அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அங்கு ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில் கைதான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜெயராஜ் சிறையில் இருந்து வெளியே வந்ததும், கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிலை தொடங்க முற்பட்டார். அதேநேரத்தில் ஏற்கனவே சிறையில் பழக்கமான நபரும் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து புதுக்கோட்டையில் ஒரு அறை எடுத்து கள்ளநோட்டுகளை அச்சடிக்க தொடங்கி உள்ளனர். ரூ.50, ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர் என்றனர்.

    கைதான 3 பேரிடம் இருந்து கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதனை தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்களும், கணினிகளும் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.7 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே மார்க்கெட்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய்கள்ளநோட்டு சிக்கியிருந்தது. கைதான 3 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    Next Story
    ×