search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வாலாஜா வாலிபருக்கு கொரோனா பாதிப்பு- அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

    வாலாஜா பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    ராணிப்பேட்டை:

    கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைபடுத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் துபாயில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 17-ம் தேதி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு இருமல், சளி இருந்தது.

    இதையடுத்து அவரை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். அவருடைய ரத்தம், சளி போன்ற மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது . அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    கொரோனா வார்டில் வாலிபருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் அவருடைய குடும்பத்தினரை டாக்டர்கள் குழுவினர் தனிமைப்படுத்தி அவர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட வாலிபர் 17 ந்தேதி ஊருக்கு வந்துள்ளார். அதற்கு பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. மாடியில் உள்ள அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு அவரது குடும்பத்தினர் உணவு எதுவும் வழங்கக்கூடாது. ஆஸ்பத்திரிக்கு சந்திக்கவும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாலிபரின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 135 பேர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேலூரில் தங்கியுள்ளனர். சளி , காய்ச்சல் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் 6 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்தது.

    இதையடுத்து அவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து அவருடைய ரத்தம், சளி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து அவர்களை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×