என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    புதுவையில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல் - நாராயணசாமி அறிவிப்பு

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுவையில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று அனைத்து துறை அரசு செயலர்கள், இயக்குனர்கள், உயரதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், அரசு செயலர்கள் அன்பரசு, பிரசாந்தகுமார் பாண்டா, சுர்பிர்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, சுற்றுலா பயணிகளை கண்காணிப்பது, விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரானோ வைரஸ் தடுப்பு, சிகிச்சை தொடர்பாக புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். 23 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகத்தின்பேரில் மருத்துவ பரிசோதனை நடத்தினோம். சோதனையில் யாருக்கும் கொரானோ வைரஸ் இல்லை என தெரியவந்தது.

    புதுவையில் இதுவரை கொரானோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் வருபவர்களை கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    திருச்சி, சென்னை விமான நிலையங்களில் இருந்து தகவல் பெற்று புதுவை வருபவர்கள் கண்காணிக்கப்படுவர். மாநில எல்லைகளில் வாகன சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மருத்துவக்குழுவினர் அவர்களை பரிசோதனை செய்து புதுவைக்குள் அனுமதிப்பர்.

    பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம். நாளை (புதன்கிழமை )முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வரும் 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா மையங்கள் ஆகியவையும் மூடப்படும். போட்டிகள் எதனையும் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தவும் 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருமண விழாக்களில் உற்றார், உறவினர், நண்பர்களை குறைந்தளவில் அழைத்து நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். மறு அறிவிப்பு வரை சண்டே மார்க்கெட் இயங்காது. உள்ளாட்சித்துறை மூலம் பஸ்நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கை கழுவிவிட்டு செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஆஷா ஊழியர்கள் கிராமப்பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளோம்.

    கல்லூரி மாணவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பஸ்கள், ரெயில்களில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ.11 கோடியும், சுகாதாரத்துறையிலிருந்து ரூ.7.50 கோடியும் உபகரணங்கள் பெற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் தேவையானவற்றை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை 50 சதவீதம் குறைந்துள்ளது. மதுபார்களை மூடுவது குறித்து 2 நாட்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×