search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    ரே‌சன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி- அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

    ரே‌சன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கும் கருப்பட்டி வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
    ராமநாதபுரம்:

    தமிழக பனை விவசாயிகள் இயற்கை பாதுகாப்பு, சமூக ஆர்வலர்கள் சார்பில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இருந்து பதநீர் மகால் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பதநீர் மகாலில் நடைபெற்ற பனை மாநாட்டிற்கு பனையெனும் கற்பகத்தரு நிறுவனர் கவிதா திருமுகம் காந்தி தலைமை வகித்தார்.

    விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன் (ராமநாதபுரம்), சதன் பிரபாகர் (பரமக்குடி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஏ. முனியசாமி , ராம்கோ கூட்டுறவு சேர்மன் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் முருகேசன், அகில இந்திய சத்திரிய நாடார் சங்க பொதுச்செயலர் காந்தி ராஜன், மாநில பனை வெல்ல வாரியத்தலைவர் சேதுபாலசிங்கம், தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, தமிழ்நாடு நாடார் பேரவை மாநில பொருளாளர் சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாநாட்டில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று பேசியதாவது:-

    1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக பனை மரங்கள் இருந்தன. 1947-ல் 5.1 கோடி பனை மரங்கள் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மாறுபட்ட கணக்கு கூறப்படுகிறது.

    பனை தொழிலாளர் நல வாரியத்தில் 2.53 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். பனை சார்ந்த பொருட்களில் 800 வகையான கைவினை பொருட்களை உருவாக்கப்படுகிறது. அவற்றை சந்தைப்படுத்த தனி அமைப்பு உருவாக்கப்படும்.

    காதிகிராப்ட், பூம்புகார் போன்றதொரு அமைப்பை பனைப்பொருட்களுக்கு உருவாக்க முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும்.

    ரே‌சன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக உடலுக்கு நன்மை அளிக்கும் கருப்பட்டி வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும்.

    எதை கேட்டாலும் தருவதால் பனை கற்பதரு என அழைக்கப்படுகிறது. நீர் ஆதாரங்களை காப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பனை தொழிலாளர் வாரிய உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகைகள் செய்து தர பரிந்துரைக்கப்படும்.

    முதிர்ந்த பனை மரங்கள் விற்பனை தொழில் முறைப்படுத்த முயற்சி எடுக்கப்படும். பனைத் தொழிலாளர்களுக்கு மரம் ஏறும் உபகரணம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கள் உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பனை பொருட்கள் உற்பத்தி, சந்தைப்படுத்தல், சலுகை வழங்குதல் உள்ளிட்ட பனை தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும். பனை பொருள் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டால், அழிவின் விளிம்பில் இருந்து பனை மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் தொன்மை வாய்ந்த நகரம் என்பதை நான் பல முறை தெரிவித்துள்ளேன். கொற்கையில் அகழ் வைப்பகம் வைப்பதற்கு மத்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளோம். அழகன் குளம் ஆய்வை ஒரு ஆண்டிற்குள் முடித்து விட்டோம். அதன் அறிக்கை விரைவில் வெளிவரவிருக்கிறது.

    கரிம ஆய்வு குறித்து அமெரிக்கா, இத்தாலி நாட்டிற்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. அந்த அறிக்கை இன்னும் 20 நாட்களில் வெளியிட்டு விடுவோம். சென்னையிலுள்ள எக்மோர் மியூசியத்திற்கு பிரதமர் மோடி ரூ. 100 கோடி அறிவித்திருக்கிறார்.

    இந்தாண்டு மொத்தம் ரூ. 200 கோடி அளவில் தொல்லியல் துறைக்கு அறிவிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம், சேலம் தாய் மர அறக்கட்டளை தேவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க மகளிரணி மாநில தலைவர் விக்டோரியா பாக்கியராஜ், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தர்மர், சாயல்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலர்கள் அந்தோணிராஜ், காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×