என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான சாமியார் வேல்முருகன்-பூமதி
    X
    கைதான சாமியார் வேல்முருகன்-பூமதி

    கள்ளக்காதலை கண்டித்ததால் சாமியாருடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்

    கள்ளக்காதலை கண்டித்ததால் சாமியாருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தந்தை பெரியார் நகர் சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது 51). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவர், நேற்று வீட்டின் மொட்டை மாடியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    மனைவி பூமதி, 2 மகள்கள் மற்றும் மகனுடன் வசித்து வந்த அவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தது. பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்குள் புகுந்து கொலை செய்த கும்பல் யார்? வீட்டில் இருப்பவர்கள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண், வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர், மணிமுத்துவின் மனைவி பூமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    இது பற்றி போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட மணிமுத்துவின் சொந்த ஊர் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் ஆகும். அங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ராமேசுவரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் குறி சொல்வதற்காக வந்துள்ளார்.

    அவருடன் மணிமுத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டது. வேல்முருகன் குறி சொல்வதோடு, சில பரிகார பூஜைகளையும் செய்து வந்துள்ளார். இதனால் பலரும் அவரை சாமியார் என அழைத்தனர். அவரை மனைவி பூமதிக்கும், மணிமுத்து அறிமுகம் செய்தார்.

    அதன் பின்னர் மணிமுத்து வெளிநாட்டு வேலைக்குச் சென்று விட்டார். இந்த சூழ்நிலையில் வேல்முருகனை அடிக்கடி பூமதி சந்தித்துள்ளார்.

    பூஜை, பரிகாரம் என பழகிய அவர்களுக்குள் நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கானாடுகாத்தானில் இருந்து பூமதி குடும்பம், காரைக்குடிக்கு மாறியது. அங்கு தனி வீடு என்பதால் சாமியார் வேல்முருகனுடன் தொடர்பு அதிகமானது.

    இந்த விவகாரம் மணிமுத்துவுக்கு தெரியவந்ததும், பூமதியை கண்டித்தார். மேலும் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய அவர், மனைவியை சாமியாருடனான பழக்கத்தை கைவிடும்படி கூறினார்.

    இது பூமதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கள்ளக்காதல் விவகாரம், கணவரை தீர்த்துக்கட்டும் அளவிற்கு செல்ல, சாமியார் வேல்முருகனுடன் ஆலோசித்தார்.

    அதன்படி நேற்று அதிகாலை 3 மணிக்கே சாமியார் வேல்முருகன் மயானத்தில் உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் பிரகாஷ்குமார் ஆகியோருடன் ராமேசுவரத்தில் இருந்து காரில் காரைக்குடி வந்துள்ளார். அவர்கள் வந்ததும் பூமதி, வீட்டுக் கதவை திறந்து விட்டுள்ளார்.

    சாமியார் வேல்முருகன் உள்பட 3 பேரும் மொட்டை மாடிக்குச் சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த மணிமுத்து கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். அவர் சத்தம் போடாமல் இருக்க, முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி உள்ளனர்.

    பின்னர் 3 பேரும் அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டனர். முன்னதாக ராமநாதபுரம் அல்லக்கண்மாய் பகுதியில், சாமியார் வேல்முருகன் நிர்வாண பூஜை நடத்தி விட்டு வந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து பூமதி, சாமியார் வேல்முருகன் மற்றும் பிரகாசை போலீசார் கைது செய்தனர். குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நேற்று அதிகாலை 2 மணி முதல் பூமதி செல்போனில் ஒரே நம்பருக்கு அடிக்கடி பேசியதை வைத்து தான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×