search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியநாச்சி கிராமத்தில் போலீசாரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
    X
    அரியநாச்சி கிராமத்தில் போலீசாரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

    வேப்பூர் அருகே சாமி சிலை வைப்பதில் தகராறு- பெண் தீக்குளிக்க முயற்சி

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாமி சிலை வைப்பத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரியநாச்சிகிராமம். இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் கட்டிடங்கள் சேதமடைந்திருந்தது. இதையொட்டி அந்த கோவில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு தரப்பினர் தாங்கள்தான் புதிதாக கோவில் கட்டுவோம் என்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் திட்டக்குடி தாசில்தார், விருத்தாசலம் உதவி கலெக்டர் ஆகியோர் தனித்தனியாக சமாதான கூட்டம் நடத்தினர்.

    இந்த கூட்டத்திலும் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் விருத்தாசலம் நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். தற்போது இந்த வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை அழைத்து அவர் மூலம் அந்த கோவிலில் சாமி சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவரையும் அழைத்து வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊருக்குள் எச்.ராஜாவை வரவிடாமல் கருப்பு கொடி காட்டி தடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் அரியநாச்சி கிராமத்துக்குள் செல்லாமல் திரும்பினார்.

    இதையடுத்து கடலூர் சப்-கலெக்டர் சரயூ உத்தரவின் பேரில் பிரச்சனைக்குரிய சாமி சிலையை அரசு கட்டுப்பாட்டில் உரிய இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அரியநாச்சி கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.

    அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சென்றனர்.

    இதையறிந்தும் தாங்கள்தான் கோவில் கட்டுவோம் என்று கூறிய ஒரு தரப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சாமி சிலையை பொது இடத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஒரு பெண் திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இதனால் அங்கு திரண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சாமி சிலை குறிப்பிட்ட பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதையறிந்ததும் ஒரு பிரிவினர் மீண்டும் அங்கு திரண்டு வந்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை அகற்றி வேறொரு இடத்தில் வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த சாமி சிலையை மீட்டு குறிப்பிட்ட இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×