search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசந்தகுமார் எம்.பி.
    X
    வசந்தகுமார் எம்.பி.

    நாங்குநேரி இடைத்தேர்தல்: திமுகவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்- வசந்தகுமார் எம்.பி.

    நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்தார்.
    கடலூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்த குமார் எம்.பி. கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்குநேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. தனித்து நின்று வெற்றி பெறவில்லை. எனவே நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது குறித்து அவரது குடும்பத்தினர் எழுப்பி உள்ள 10 கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக உள்ளது.

    இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்று பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.

    ஆனால் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டு உள்ள கடும் வீழ்ச்சி காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். சம்பளம் இல்லாத விடுமுறையை நிறுவனங்கள் அறிவிக்கின்றன.

    கார் தயாரிப்பு என்பது பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிப்போடு சேர்ந்தது. கார் தயாரிப்பு நின்றதால் பல்வேறு சிறிய அளவிலான நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு மார்ச் 31-ந் தேதி வரை மட்டுமே சலுகை அறிவித்து உள்ளது. இதுவரையில் உற்பத்தியான கார்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே இது உதவும்.

    நாடு முன்னேற தொழிற்சாலைகள் இயங்க வேண்டியது அவசியம். படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கை இளைஞர்களிடம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடன்களை தனியார் நிறுவனங்கள் மூலம் வசூலிக்கும் பணியில் கடுமையாக ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×