search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி மீது ஆசிட் வீசிய முத்தமிழன். ஆசிட் வீச்சில் காயம் அடைந்த மாணவி சுசித்ரா
    X
    மாணவி மீது ஆசிட் வீசிய முத்தமிழன். ஆசிட் வீச்சில் காயம் அடைந்த மாணவி சுசித்ரா

    சிதம்பரத்தில் பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு - மாணவர் வெறிச்செயல்

    பல்கலைக்கழக மாணவி மீது மாணவர் ஆசிட் வீசிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பழைய கூடலூரை சேர்ந்தவர் முத்தமிழன் (வயது 19). இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் உடற் கல்வி இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் அண்ணாமலை நகரில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தார். நாகை மாவட்டம் கதிராமங்கலம் நடுவெளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (19) என்பவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற் கல்விதுறையில் பி.பி.எஸ். பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தாமரை விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    மாணவர் முத்தமிழனும், மாணவி சுசித்ராவும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் மாணவி சுசித்ரா திடீரென்று முத்தமிழனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மற்றொரு மாணவருடன் பழகி வந்தார். இந்த விபரம் முத்தமிழனுக்கு தெரிய வந்ததும் மனவேதனை அடைந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்தமிழன் தனது சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அங்கு அவர் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்தார். பின்னர் திடீரென்று அவர் வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் உயிர் பிழைத்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை முத்தமிழன் தான் படிக்கும் பல்கலை கழகத்துக்கு வந்தார். மிகுந்த சோகத்துடன் இருந்தார். தனது நண்பர்கள் யாருடனும் பேசாமல் அமைதியாக காணப்பட்டார். மாலையில் வகுப்பு முடிந்ததும் முத்தமிழன் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தனத்துக்கு சென்றார். அங்கு சுசித்ரா விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்தார்.

    அப்போது முத்தமிழன், சுசித்ராவிடம் என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்? வேறு ஒரு மாணவருடன் ஏன் பழகுகிறாய்? என்று கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்பு அவர் திடீரென்று ஆவேசம் அடைந்து மாணவி சுசித்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து சுசித்ரா மீது வீசினார். இதில் மாணவியின் முகம், முதுகு, கை, உதடு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அவர் கூச்சல் போட்டு அலறினார்.

    மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓடி வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மாணவி மீது ஆசிட் வீசிய முத்தமிழனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவரும் படுகாயம் அடைந்தார்.

    இந்த தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து முத்தமிழனை மீட்டு ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவி சுசித்ராவுக்கும், பொதுமக்களால் தாக்கப்பட்ட மாணவன் முத்தமிழனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவி சுசித்ரா, மாணவன் முத்தமிழன் ஆகியோரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×