search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நிரம்பியிருக்கும் காட்சி.
    X
    வீராணம் ஏரி நிரம்பியிருக்கும் காட்சி.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.62 அடியாக உயர்ந்தது

    கீழ் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் நேற்று 45.80 அடியாக இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 46.62 அடியாக உயர்ந்துள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது.

    கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்டு 13-ந்தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு ஆகஸ்டு 20-ந் தேதி தண்ணீர் வந்தடைந்தது.

    கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. அதன் பின்னர் சென்னைக்கு குடிநீருக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் கீழ்அணைக்கு வந்தது.

    இதையடுத்து கீழ் அணையில் இருந்து நேற்று 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதில் 790 கனஅடி தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று ஏரியின் நீர் மட்டம் 45.80 அடியாக இருந்தது. இன்று அது 46.62 அடியாக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் கூட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு நேற்று 48 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று 49 கனஅடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தால் ஏரி இன்று அல்லது நாளை நிரம்பும். ஏரியில் தண்ணீர் நிரம்பிவிட்டால் சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×