search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி.
    X
    வீராணம் ஏரி.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது

    கீழணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. ஆனாலும் சென்னை நகரின் குடிநீருக்காக 46 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகித்துள்ளது.

    கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. ஆரம்பத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

    ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியதும் சென்னைக்கு அனுப்பும் தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டது. 28 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பப்பட்டது.

    கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் மேட்டூர் அணை வந்தடைந்தது. அங்கிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கீழணையில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. கடந்த வாரம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.44 அடியாக உயர்ந்தது.

    இந்த நிலையில் கீழணையில் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

    நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.75 அடியாக இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 46.72 அடியாக குறைந்தது. ஆனாலும் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை நகரின் குடிநீருக்காக நேற்று வினாடிக்கு 44 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இன்று காலை அது 46 கனஅடி தண்ணீராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கீழணையில் தற்போது தண்ணீர் இல்லை. எனவே அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. கல்லணையில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டால்தான் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும். மேலும் வீராணம் ஏரியை சுற்றி அதிக அளவு மழை பெய்தால் ஏரியின் நீர்மட்டம் கூடும். ஏரி முழு கொள்ளளவை எட்டினால் சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்பப்படும் என்றார். 


    Next Story
    ×