search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்த கண்டக்டர் கோபிநாத்
    X
    இறந்த கண்டக்டர் கோபிநாத்

    டிக்கெட் எடுக்காமல் தகராறு: போலீஸ்காரரை கைது செய்யக்கோரி மறியல்

    கடலூர் அருகே டிக்கெட் எடுக்காத போலீசாருடன் வாக்குவாதம் செய்த பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறந்தார். போலீசாரை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மந்தராக்குப்பம் முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 55) இவர் அரசு பஸ்சில் கண்டக்ராக பணியாற்றி வந்தார். நேற்று விருத்தாசலத்திலிருந்து கடலூர் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்ராக சென்றார். பஸ்சை பண்ருட்டி அருகே உள்ள காணாங்குப்பத்தை சாரங்கபாணி என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அப்போது திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் பழனிவேல் என்பவர் பஸ்சில் ஏறினார்.

    அவர் சாதாரண உடை அணிந்திருந்தார். அவரிடம் கோபிநாத் டிக்கெட் எடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

    அப்போது அவர் தான் போலீஸ்காரர் என்று கூறினார். உடனே கோபிநாத் உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் என்றார். இதை தொடர்ந்து போலீஸ்காரர் பழனிவேலுக்கும் கண்டக்டர் கோபிநாத்துக்கும் இடையே ஓடும்பஸ்சில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஊமங்கலம் அருகே பஸ் வந்தபோது திடீரென்று கோபிநாத் நெஞ்சை பிடித்துக்கொண்டி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    அதனை தொடர்ந்த கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீகாரர் பழனிவேலை பஸ்சில் இருந்த பொதுமக்கள் பிடித்து மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இறந்து போன கோபிநாத்தின் உடலை பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு நேற்று இரவு பிரேத பரிசோதனை முடிந்ததும் கோபிநாத்தின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே டிக்கெட் எடுக்காமல் கண்டக்டரிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்ட போலீஸ்காரர் பழனிவேலை கைது செய்ய கோரி இன்று மதியம் 12 மணியளவில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ சங்கத்தை சேர்ந்த பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு கொடியுடன் ஏராளமானோர் திரண்டனர்.

    பின்பு அவர்கள் பணிமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டக்டர் சாவுக்கு காரணமான போலீஸ்காரர் பழனிவேலை கைது செய்ய கோரி கோ‌ஷமிட்டனர்.

    இந்த மறியல் பேராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.

    இறந்துபோன கோபிநாத் பணிஓய்வு பெற இன்னும் 8 மாதங்களே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    கோபிநாத்துக்கு கலைவாணி என்ற மனைவியும் 2 மகன் 1 மகள் உள்ளனர்.

    Next Story
    ×