search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    X
    கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து பதட்டம்: படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

    சுருக்கு வலைகளை கொண்டு மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் மீன் விற்பனை செய்வது வழக்கம்.

    இங்கு சுருக்கு வலையில் பிடிக்கப்படும் மீன்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுப்பேட்டை, சாமியார்பேட்டை உள்ளிட்ட 32 மீனவ கிராமத்தினர், விசைப்படகு உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் எம்.ஜி.ஆர். திட்டு மீனவர்கள் கடந்த சில நாட்களாக சுருக்கு வலையில் மீன்பிடித்து வருகிறார்கள். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எம்.ஜி.ஆர்.திட்டு மீனவர்கள் தொடர்ந்து சுருக்குவலை மூலம் மீன்பிடித்து வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 32 மீனவ கிராமத்தினர் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரத்தில் போராட்டம் நடத்தினர்.

    அப்போது அன்னங்கோவில் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடற்கரை ஓரம் எம்.ஜி.ஆர்.திட்டு பகுதி படகுகள் நின்று கொண்டிருந்தன. அதில் சுருக்கு வலைகள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த சில மீனவர்கள் படகுகளுக்கு தீ வைத்தனர். இதில் ஒரு விசைப்படகு உள்பட 4 படகுகள் தீ பிடித்து எரிந்தன. மேலும் படகில் இருந்த வலைகள், என்ஜின்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர்.திட்டு பகுதி மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வெள்ளாற்று முகத்துவாரத்துக்கு வர முயன்றனர். இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றார். அங்கு இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    பரங்கிபேட்டையில் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கடலூர் முதுநகர் துறைமுகத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.


    இந்த சம்பவத்தால் அன்னங்கோவில் உள்பட பல்வேறு மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து எம்.ஜி.ஆர்.திட்டு கிராமத்தை சேர்ந்த படகுகளின் உரிமையாளர் குமார் கிள்ளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் படகுகளுக்கு தீ வைத்து எரித்ததாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் புதுப்பேட்டையை சேர்ந்த குழந்தைவேலு(41), புதுக்குப்பம் ராஜூ(58), சின்னூர் தியாகு(33), சிவா(34), செல்வம்(40), புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த குமார்(48), வீரமணி(51), பக்கிரிசாமி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இவர்கள் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தீ வைத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பரங்கிப்பேட்டை பகுதியில் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மீனவர்களிடையே பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்காரணமாக இன்று கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் 32 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×