search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அன்புசெல்வன், மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்கியபோது எடுத்த படம்.
    X
    கலெக்டர் அன்புசெல்வன், மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்கியபோது எடுத்த படம்.

    பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை அலட்சியம் செய்யாதீர்கள் - அதிகாரிகள் மீது கலெக்டர் பாய்ச்சல்

    கடலூரில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை அலட்சியம் செய்யாதீர்கள் என்று கூறி கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளை கண்டித்தார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த பொதுமக்களிடம் கலெக்டர் அன்புசெல்வன் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது குறைகேட்பு கூட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அதிகாரிகளிடம் கலெக்டர் அன்புசெல்வன் கேட்டறிந்தார். இதில் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வராமல் வேறு ஊழியர் வந்ததால் கலெக்டரின் கேள்விக்கு சரியான பதில் கூற தெரியாமல் திருதிருவென விழித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளை கண்டித்தார். அவர் கூறும்போது, பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அலட்சியம் காட்டுகிறீர்கள். ஒரு குட்டி ராஜ்ஜியமே நடத்துகிறீர்கள்.

    குறைகேட்பு கூட்டத்துக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியோ அல்லது ஊழியரோ வருவதில்லை. சம்பந்தப்பட்ட துறையின் சார்பில் ஒருவர் கலந்துகொள்ள வேண்டும் என்று யாரோ ஒரு கடைநிலை ஊழியர்தான் வருகிறார். அவரிடம் கேட்டால் சரியாக பதில் கூற தெரியவில்லை. இதனால் நேரம் வீணடிக்கப்பட்டு, கூட்டம் நடைபெறுவதற்கான நோக்கமே சிதைந்துபோகிறது. பொதுமக்கள் மத்தியில் பல்வேறு துறைகள் மீது அவப்பெயர்தான் உள்ளது.

    பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் நியாயமான மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்பட்ட மனுக்கள் மீது அதை ஏற்கப்பட்டது, நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை பதிலாக கொடுக்க வேண்டும். முடிந்த வரை பெறப்படும் மனுக்கள் மீதான கோரிக்கையை எந்தவகையிலாவது செய்து கொடுக்க முடியுமா? என்று நேர்மறையான எண்ணத்தோடு செயல்படுங்கள். சில மனுக்களுக்கு தீர்வுகாண சலுகை வழங்க கேட்டு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யலாம். அப்போதுதான் மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

    முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வுகாண 15 நாட்கள்தான் கால அவகாசம் உண்டு. வேண்டுமானால் கூடுதலாக 15 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். 30 நாட்களுக்குள் மனுக்கள் மீது தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை பதிவேடுகளில் குறித்து பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    கூட்டத்தில் ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 325 மனுக்கள் பெறப்பட் டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி அதற்கான பதிலை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு குறித்த காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    முன்னதாக கடலூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஓ.எல்.பெரியசாமி தலைமையில் மன்றத்தினர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வனிடம் மனு கொடுத்தனர்.

    மேலும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வங்கி கடன் மானியத்துக்கான காசோலையையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.400 மதிப்பிலான கருப்பு நிற மூக்கு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சியையும் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×