search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து பிரமுகர் கொலை வழக்கு - கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை
    X

    இந்து பிரமுகர் கொலை வழக்கு - கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை

    முத்துப்பேட்டையில் இந்து பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக கைதான 3 வாலிபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முகாமிட்டு இந்து பிரமுகர் கொலை தொடர்பாக 3 பேரின் வீடுகளில் இன்று சோதனை நடத்தினர். பாதுகாப்புக்காக போலீசார் 80 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் நடந்த ஒரு இந்து பிரமுகர் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக கீழக்கரை தேவிப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் முத்துப்பேட்டை பகுதி தென்னை மரைக்காயர் தெருவை சேர்ந்த சாஜித், நண்டு மரைக்காயர் தெருவை சேர்ந்த இம்தியாஸ், நெய்யக்கார தெருவை சேர்ந்த ரிஸ்வான் ஆகிய 3 பேர் தொடர்பில் இருந்ததாகவும், இவர்கள் சதி திட்டம் தீட்ட முத்துப்பேட்டையில் ரகசிய கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இதில் சிறையில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை வெளியே கொண்டு வரவும், இரு சமூகத்தினரிடையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் சதித்திட்டம் தீட்டியதாகவும் கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு போலீசார் அதிரடியாக சாஜித், இம்தியாஸ், ரிஸ்வான் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை முத்துப்பேட்டைக்கு வந்த தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் ஒரு பிரிவுக்கு 20 போலீசார் வீதம் 4 பிரிவுகளாக மொத்தம் 80 போலீசாருடன் சென்று கீழக்கரை சம்பவத்தில் கைதான சாஜித், இம்தியாஸ், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளை அதிகாலை சுமார் 5 மணிக்கு சுற்றி வளைத்து அதிரடியாக வீடுகளுக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. ஜான்ஜோசப், திருவாரூர் டி.எஸ்.பி. சங்கர் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக 3 பேர் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது? என்று ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த சோதனை என்று உள்ளுர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பகோணம் அருகே திருபுவனத்தில் முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மதமாற்ற விவகாரத்தில் நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசாரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருபுவனம் பகுதியில் விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் முத்துப்பேட்டை பகுதியில், ராமலிங்கம் படுகொலை குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வந்துள்ளார்களா? என்று தெரியவில்லை. இதுபற்றி தகவல் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

    அதிகாலை துவங்கிய சோதனை காலை 10 மணியை கடந்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதால் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ரம்ஜான் மாதம் என்பதால் அதிகாலையில் இஸ்லாமியர்கள் என்ன என்று தெரியாமல் கூட்டம் கூட்டமாக பதற்றத்துடன் நின்று வேடிக்கை பார்த்தனர்.

    அதேபோல் முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார், போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×