search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்
    X

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    மெட்ரோ ரெயில்களில் பயணிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஷேர் கார், ஷேர் ஆட்டோ, சைக்கிள், எலக்ட்ரானிக் ஸ்கூட்டி போன்ற வசதிகள் அளிக்கப்பட்டன.

    மெட்ரோ ரெயில் நிலையங்களை பயன்படுத்தும் பயணிகள் அங்கிருந்து அலுவலகம், சென்று வரவும், தொடர் பயணங்களை மேற்கொள்ள வசதியாக இணைப்பு போக்குவரத்து வசதியினை வழங்கி உள்ளது.

    மெட்ரோ நிலையங்களுடன் ஸ்மால் பஸ், மாநகர பஸ்களை இணைத்துள்ளது. மேலும் பயணிகள் தங்கள் கார், இருசக்கர வாகனங்களை நிலையத்தில் விட்டு சென்று பயணம் செய்ய ‘பார்க்கிங்’ வசதியும் அளிக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டியுள்ள காலி இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருசில ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கடுமையாக போட்டி ஏற்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட நெருக்கடியான இடங்களில் உள்ள நிலையங்களில் பார்க்கிங் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    ஒருசில இடங்களில் பயணம் செய்யாத அப்பகுதி வியாபாரிகள் ரெயில்வே இடத்தில் ‘பார்க்கிங்’ செய்து வருகின்றனர். கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர்.

    இவற்றை எல்லாம் முறைப்படுத்த பார்க்கிங் கட்டணத்தை ஸ்மார்ட் கார்டு மூலம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சார்த்த முறையில் இதனை செயல்படுத்தியதில் ஒருசில குறைகள் இருப்பதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கண்டு பிடித்துள்ளது. அவற்றை சரிசெய்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் திட்டத்தை விரைவில் தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது மாதம் அல்லது தினசரி அடிப்படையில் டோக்கன் முறையில் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்த தொடங்கினால் பயணிகளின் நேரம் மிச்சமாகும்.

    மெட்ரோ ரெயிலை பயன்படுத்தக்கூடிய பயணிகளுக்கு மட்டும் தான் பார்க்கிங் வசதி அளிக்கப்படும். மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடத்துக்கு அதிக போட்டி உள்ளது. பலர் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

    மெட்ரோ ரெயில் நெட்ஒர்க் அமைந்துள்ள 45 கி.மீ. தூர அளவில் 8000 வாகனங்கள் தினமும் பார்க்கிங் செய்யப்படுகின்றன. ஒருசில நிலையங்களில் வழக்கமாக வரும் பயணிகளுக்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்படுகிறது.

    மாதாந்திர பாஸ் வசதி பெற்றவர்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் ஊழியர்களிடம் மோதல் போக்கில் ஈடுபடும் நிலை உருவாகி வருகிறது.

    ஸ்மார்ட் கார்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த கார்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாகனத்தை உள்ளே கொண்டு வர முடியும். பார்க்கிங் பகுதியில் நிறுத்த முடியும். மற்றவர்கள் உள்ளே நிறுத்த முடியாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×