search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பம்மல் கல்குவாரி நீரை குடிநீராக பயன்படுத்தலாமா? - ஆய்வு செய்ய உத்தரவு
    X

    பம்மல் கல்குவாரி நீரை குடிநீராக பயன்படுத்தலாமா? - ஆய்வு செய்ய உத்தரவு

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பம்மல் கல்குவாரி நீர் குடிநீராக பயன்படுத்த தகுதி உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    தாம்பரம்:

    பருவ மழை பொய்த்ததால் இந்த ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.

    பூண்டி, புழல் ஏரியில் உள்ள தண்ணீரை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் தினமும் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை கூடுதலாக எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதேபோல பம்மல் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல்குவாரியில் தேங்கி உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 6.5 கோடி செலவில் பம்மல், அனகாபுத்தூர் ஆகிய 2 நகராட்சிகளிலும் தனித்தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    சோதனை ஓட்டமாக தண்ணீரை சுத்திகரித்து குடிநீருக்கு பயன்படுத்த உகந்ததா? என்று அறிய மாநில சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி ஆராய்ச்சி மைய நீர் பரிசோதனை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை தண்ணீரின் தன்மை குறித்த முடிவு தெரிவிக்காமல் உள்ளதாக தெரிகிறது. இதனால் செங்கழுநீர் கல்குவாரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, ‘கல்குவாரி, ஏரி, குளங்களில் உள்ள நீரை குடிநீருக்கு பயன்படுத்த தகுதி உள்ளதா? என்பதை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க முடியும்.

    நீரின் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பிய 3 நாட்களில் முடிவை தெரிவிக்க வேண்டும். கல்குவாரி நீரின் தன்மை குறித்த முடிவு என்ன காரணத்தினால் தாமதம் என்று தெரியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    பம்மல், அனகாபுத்தூர் கல்குவாரி நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.

    Next Story
    ×