search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதியாண்டு நிறைவு- வங்கிகள், வருமானவரித்துறை அலுவலகம் நாளை செயல்படும்
    X

    நிதியாண்டு நிறைவு- வங்கிகள், வருமானவரித்துறை அலுவலகம் நாளை செயல்படும்

    நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Bank #IncomeTaxDepartment
    சென்னை:

    நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் நாளை (31-ந்தேதி)யுடன் முடிவடைவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படமாட்டாது. அரசு துறைகளின் கருவூலங்கள் சார்பில் பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறும். கருவூல கணக்குகளை சரிபார்த்தல், காசோலை, வரைவு காசோலை மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டும் நடைபெறும்.

    பொது மக்கள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மட்டும் செலுத்தலாம். வழக்கமான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற பணிகள் நடைபெறாது. அதே வேளையில் மாதத்தின் 5-வது சனிக்கிழமையாக இன்று உள்ளதால் வங்கிகள் செயல்படுகின்றன.

    மேலும் ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி அன்று வங்கிகள் திறந்து இருந்தாலும் சேவை நடைபெறாது. பண பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை பரிவர்த்தனை நேரடியாக மேற்கொள்ள இயலாது. இணையதளம், செல்போன் வழியாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.



    எந்திரங்கள் வழியாக பணம் டெபாசிட் செய்வதில் எந்த சிக்கலும் கிடையாது என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.

    வங்கிகள் நாளை செயல்படுவது போல வருமான வரித்துறை அலுவலகமும் இயங்குகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான தாமதிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வருமானவரி படிவங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

    அதனால் வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்றும் நாளையும் வருமானவரி அலுவலகம் வழக்கம் போல் செயல்படும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை மண்டல அலுவலகங்களிலும் வழக்கமான வேலை நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகிறது.

    சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி சொத்துவரி இலக்கு வைத்து வசூலில் ஈடுபட்டு வருகிறது. நாளையுடன் நிதியாண்டு நிறைவடைவதால் நாளை அனைத்து மாநகராட்சி சொத்து வரி அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சொத்து வரி வசூலில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) சொத்து வசூல் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

    மேலும் அரசு இ.சேவை மையங்களும் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இ.சேவை மையங்களை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். #Bank #IncomeTaxDepartment
    Next Story
    ×