search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயருகிறது
    X

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயருகிறது

    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. #TollGate
    சென்னை:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 43 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக சுங்க சாவடிகளில் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளிலும் தரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலைகளில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    6 இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளான சென்னை- பெங்களூர், சேலம், மதுரை சுங்கசாவடிகள் செங்கல்பட்டு பரனுர், சூரப்பேடு, சென்னை பைபாஸ் ஆகியவற்றில் 2005-ம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2016 வரை ரூ.1,500 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.


    பிற இடங்களில் உள்ள சுங்க சாவடிகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, வேலூர் (2), கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி (3), சிவகங்கை (2) ஆகியவற்றின் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    சுங்க சாவடி கட்டண உயர்வு குறித்து மதுரையைச் சேர்ந்த வணிகர் எஸ்.அருண் கூறியதாவது:-

    மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு முறை செல்ல வாகன சுங்க கட்டணம் ரூ.800 செலுத்தி வருகிறோம். சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.

    ஆம்னி பஸ் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-

    சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. பெருங்களத்தூர்- செங்கல்பட்டு வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தினமும் 1 லட்சம் வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன.

    டீசல் கட்டணம் உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களை நஷ்டத்தில் இயக்கி வருகிறோம். சுங்க சாவடிகளில் சுங்க கட்டண உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TollGate
    Next Story
    ×