என் மலர்
செய்திகள்
சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் கார் மோதி பலி
பாடாலூர்:
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பூச்சொரிதல் விழா. இதையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.
அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் 25 பேர் இன்று அதிகாலை 3 மணிக்கு சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை பாடாலூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர்.
இதில் 20 பேர் ஒரு குழுவாகவும், மற்ற 5 பேர் சற்று பின்னால் மற்றொரு குழுவாகவும் சென்றனர். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இறுதியில் அந்த கார் பாதயாத்திரை சென்ற 5 பேர் குழுவின் கூட்டத்தில் புகுந்தது.
இதில் கலியன் (வயது 60), பரமேஸ்வரி (35), காவேரி (55) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களுடன் சென்ற மருதாம்பாள் (60), சோலையம்மாள் (70) ஆகிய இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு வேன் மூலம் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பேர் வந்துள்ளனர். தூக்க கலக்கத்தில் இருந்த அவர்கள் பக்தர்கள் கூட்டத்தில் மோதியுள்ளனர். விபத்து நடந்ததும் அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலாவது பூச்சொரிதல் விழா இன்று தொடங்கும் நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் 3 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.