search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    ம.பொ.சி., காலிங்கராயன், அழகுமுத்துக்கோன், பென்னி குயிக், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். #EdappadiPalaniswami #SPAdithanar
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் இதழியல் முன்னோடியும், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான “தினத்தந்தி” தமிழ் நாளிதழைத் தொடங்கி, பாமரரும், பாட்டாளியும் எளிய தமிழ் மூலம் படிக்க வழிவகை செய்தவர் சி.பா.ஆதித்தனார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவையின் அவைத்தலைவராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சி.பா.ஆதித்தனார்.

    தமிழ் ஆர்வலர்கள் அன்னாரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையினை ஏற்று, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.

    இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், சிலப்பதிகாரத்தின் மீது ஆளுமை கொண்டிருந்த சிலம்புச் செல்வர் என அனைவராலும் அறியப்பட்டவர், முன்னாள் மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது, சென்னையை தமிழ்நாட்டின் தலைநகராக தொடரச் செய்யவும், திருத்தணி, செங்கோட்டை பகுதிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்டவர்; எழுத்து சீர்திருத்தத்தின்போது ‘ஐ’யும், ‘ஒள’வும் தமிழ் மொழியில் தொடரச் செய்தவர் ம.பொ.சிவஞானம்.

    அவரது தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், சென்னை, தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானத்தின் திருவுருவச் சிலைக்கு அன்னாரின் பிறந்த நாளான ஜூன் 26 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.



    துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கையுடன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட அப்பகுதி விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களது கோரிக்கையினை ஏற்று கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளான ஜனவரி மாதம் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

    பவானி ஆறு காவேரி ஆற்றுடன் கூடும் இடத்திற்கு சற்று முன்பே அணை கட்டி பவானி ஆற்றின் நீரை வாய்க்கால் மூலம் நேராகக் கொண்டு சென்றால் தண்ணீர் விரைந்து ஓடிவிடும் என்பதாலும், வாய்க்கால்களை வளைத்து வளைத்து வெட்டுவதனால் அதிக பரப்பளவு பாசனம் பெறும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடனும், விவசாயிகளின் நலன்களுக்காக வாய்க்கால்களை திறம்பட வெட்டி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தை மாதம் 5-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தவர் காலிங்கராயன்.

    அன்னாரை சிறப்பு செய்யும் வகையில் தை மாதம் 5-ந்தேதியன்று பொதுமக்கள் சார்பாக காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மேலும் சிறப்பு செய்யும் விதமாக 13.5.2018 அன்று அவரது முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணி மண்டபம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. காலிங்கராயனின் நினைவைப் போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ந்தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

    சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரத்தையும் வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்ட சிலையை 15.3.1996 அன்றும், தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் நினைவு மண்டபத்தை 8.12.2014 அன்றும், அம்மா திறந்து வைத்து அன்னாருக்கு பெருமை சேர்த்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள அன்னாரது நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும், அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #SPAdithanar

    Next Story
    ×