search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்டரி திருட்டில் கைதான மாணவன் வீட்டில் குவியல் குவியலாக வெடி பொருட்கள் - போலீசார் அதிர்ச்சி
    X

    பேட்டரி திருட்டில் கைதான மாணவன் வீட்டில் குவியல் குவியலாக வெடி பொருட்கள் - போலீசார் அதிர்ச்சி

    திண்டுக்கல் அருகே பேட்டரி திருட்டில் கைதான மாணவன் வீட்டில் குவியல் குவியலாக வெடி பொருட்கள் கிடைத்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள கருணாநிதி நகரில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ஒரு காரின் பேட்டரியை சிறுவர்கள் சிலர் திருட முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    ஒருவரை மட்டும் பிடித்து சின்னாளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் என்றும் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவர் என்பதும் தெரிய வந்தது.

    போலீசார் விசாரணையில் அந்த மாணவன் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. திருடிய பொருட்கள் அனைத்தையும் தனது அக்காள் வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக மாணவன் தெரிவித்தார். இதனையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு பேட்டரி உதிரி பாகங்கள், கரி மருந்து, திரி என ஏராளமான வெடி பொருட்கள் குவியல் குவியலாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தன்னுடன் சேர்ந்து மேலும் சில மாணவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை திண்டுக்கல் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஜஸ்டின் பிரபாகரன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர்.

    சோதனையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் கோவில் விழா மற்றும் திருவிழா காலங்களில் வெடிக்க பயன்படுத்தக்கூடியவை என தெரிய வந்தது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும் புறநகர் பகுதிக்கு கொண்டு சென்று அளித்தனர்.

    பிடிபட்ட 4 மாணவர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பின்புலமாக வேறு யாரேனும் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். ஏனெனில் பணத்துக்காக திருட்டு தொழிலில் ஈடுபடும் மாணவர்கள் வெடி பொருட்களை திருடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இவர்களை இயக்குவது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×