search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் - பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
    X

    கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் - பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

    திருச்சியில் பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை அலுவலகம் உள்ளது. இங்கு போலீசாக தாரணி (22) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஆயுதப்படை அலுவலகத்தில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    அப்போது அவரது அறைக்கு தற்செயலாக சென்ற மற்றொரு பெண்போலீஸ் தாரணி வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பெண் போலீஸ் தாரணி தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கடந்த 10 நாட்களில் எடமலைப்பட்டிபுதூர் பட்டாலியனில் வேலை பார்த்த முத்து என்ற போலீஸ்காரர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தார். திருச்சி பெண்கள் சிறை வார்டன் செந்தமிழ்செல்வி, காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தார். இந்தநிலையில் தாரணி தற்கொலைக்கு முயன்றது திருச்சி போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து ஆயுதப்படை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தாரணிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. அவர் கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த அவர் மேலும் 4 நாட்கள் கூடுதலாக மருத்துவ விடுப்பு நீட்டிப்பு செய்துள்ளார்.

    விடுப்பு முடிந்ததும் நேற்று ஆயுதப்படை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விடுப்பு நீட்டித்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தாரணி கர்ப்பமடைந்தது குறித்து தெரிவித்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் விடுப்பை நீட்டித்ததாகவும், அதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தாரணி கர்ப்பம் அடைந்தது குறித்து கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட மனஉளைச்சலில் தான் தாரணி அங்கிருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே ஆயுதப்படை, போலீஸ் நிலையங்களில் பெண் போலீசாருக்கு சில போலீசார் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவதூறாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக புதிதாக திருமணமாகிய பெண் போலீசாரிடம் ஏட்டுக்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிண்டலாக பாலியல் பேச்சு பேசி அருவருப்பாக நடந்து கொள்வதாக பெண் போலீசார் புலம்புகிறார்கள்.

    சில பெண் போலீசார் இதை தவறாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் வயது குறைந்த சில பெண் போலீசார் இதுபோன்ற பாலியல் கிண்டல் பேச்சுக்களைகேட்டு மனம் உடைந்து போகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் போலீசார் வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews
    Next Story
    ×