search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐயாயிரம் எங்கே, ஆயிரம் எங்கே? - திருவாரூர் தொகுதியில் புலம்பல் சப்தம்
    X

    ஐயாயிரம் எங்கே, ஆயிரம் எங்கே? - திருவாரூர் தொகுதியில் புலம்பல் சப்தம்

    இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் இப்போதே அளிக்கப்படவுள்ள நிலையில் சிலரது மனநிலை மட்டும் வேறுவிதமாக உள்ளது. #Thiruvarurbyelection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழக அரசு அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு தேர்தலுக்குபின் அளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதனால் முன்னர் பொங்கல் பரிசு உரிய நேரத்தில் கிடைக்காமல் போனதே... என்று கவலைப்பட்ட திருவாரூர் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    ஆனால், ‘நோட்டுக்கு ஓட்டு’ என்ற கொள்கையை தவறாமல் கடைபிடிக்கும் ஒருசிலர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி-தோல்வியை பணம்தான் நிர்ணயித்து தந்தது என பரவலாக பேசப்பட்டது. இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியை தக்கவைத்து கொள்ள அக்கட்சியினரும், அந்த தொகுதியை தட்டிப்பறிக்க பிறகட்சிகளும் கடுமையான பலப்பரீட்சை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆளும் அ.தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் அமிலப்பரீட்சையாகவும், எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டது.

    கொள்கை, வேட்பாளர் என்ற எல்லைகளையும் கடந்து இங்கும் பணம்தான் கதாநாயகனாக விளையாடும் என பரவலான கருத்து நிலவியது. ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய்வரை கிடைக்கலாம் என்னும் ஆதங்கமும் தலைதூக்கியது.

    இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது சிலரின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

    குடும்ப அட்டைக்கு அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை இடைத்தேர்தல் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் வாங்கி கொள்ளலாம். ஆனால், ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்க இன்னும் எத்தனை மாதம் காத்திருக்க வேண்டுமோ? என அவர்கள் தவிக்கின்றனர்.

    இதற்கேற்ப, ‘டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தெரிவித்துள்ள கருத்து எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்ததுபோல் அவர்களின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    பத்து பேர் கொண்ட குடும்பமானாலும் அரசு அளிக்கும் பொங்கல் ரொக்கப்பரிசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தான். ஆனால், அந்த குடும்பத்தில் 4 வாக்காளர்கள் இருந்தால் போதும் தலைக்கு ஐயாயிரம் என்றால் சுளையாக இருபதாயிரம் ரூபாய் கிடைத்திருக்குமே! என சிலர் புலம்புகின்றனர். #Thiruvarurbyelection 
    Next Story
    ×