search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் நகைக்கடை ஷட்டரை உடைத்து ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    திருவள்ளூரில் நகைக்கடை ஷட்டரை உடைத்து ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை

    திருவள்ளூரில் நேற்று இரவு நகைக்கடை ஷட்டரை உடைத்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் காந்தி தெருவை சேர்ந்தவர் பிரவீண் (வயது 33). இவர் திருவள்ளூர் பஜார் வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இங்கு தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று இரவு பிரவீண் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இரவில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வெல்டிங் மிஷின் மூலம் ‌ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடைக்குள் இருந்த தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    கடையில் கொள்ளை போன சம்பவம் இன்று காலையில் பிரவீணுக்கு தெரியவந்தது. அவர் கடைக்கு சென்று பார்த்த போது 38 பவுன் நகை, 80 வைரக்கற்கள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து பிரவீண் திருவள்ளூர் டவுன் போலீசுக்கு புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், டவுன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    போலீஸ் மோப்ப நாய் ராம்போ வரவழைக் கப்பட்டது. அது செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஓடி ஈக்காடு பகுதியில் சென்று நின்றது. அந்த பகுதியில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளன. அந்த கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த நகைக்கடையில் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே இந்த கடையை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

    அந்த பகுதியில் இரவு 12 மணி வரை மக்கள் நடமாட்டம் இருக்கும். அதன்பிறகு அதிகாலை 3 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாடத் தொடங்கி விடுவார்கள். இந்த 3 மணி நேர இடைவெளியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

    கடையில் இருந்த வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் எடுக்க வில்லை. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகைகளும் தப்பின.

    கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×