search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து வழக்கில் மாணவர்களுக்கு இரவு 9 மணிக்கு ஜாமீன் வழங்கியது ஏன்? மாவட்ட நீதிபதிக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    விபத்து வழக்கில் மாணவர்களுக்கு இரவு 9 மணிக்கு ஜாமீன் வழங்கியது ஏன்? மாவட்ட நீதிபதிக்கு ஐகோர்ட்டு கேள்வி

    விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரவு 9 மணிக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்தவர் சுனந்தா. சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வேகமாக வந்த கார் மோதி பலியானார்.

    அந்த காரை ஓட்டி வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் உடனடியாக கைது செய்யவில்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து சுனந்தாவின் கணவர் சுரேந்திரன் நாயர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மாணவர்கள் இருவரும் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த என் மனைவி, பல நாட்கள் சிகிச்சைக்கு பின் மரணமடைந்தார். அவர் உடல் நலத்தை பற்றித் தெரிந்துக் கொண்ட போலீசார், அவர் இறப்பதற்கு முதல் நாள் காரை ஓட்டியதாக ஒரு மாணவனை கைது செய்து, அவனை உடனடியாக ஜாமீனிலும் விடுவித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விபத்து வழக்கின் புலன் விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்து, விசாரணையை ஜனவரி 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    இதையடுத்து காரை ஓட்டியதாக மாணவர்கள் கரண், மதன் ஆகியோர் மீது உள்நோக்கம் இல்லாமல் பிறரது மரணத்தை ஏற்படுத்துதல் என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் டிசம்பர் 18 மற்றும் 19-ந்தேதிகளில் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்ககோரி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்கள் இருவருக்கும் கடந்த டிசம்பர் 21-ந்தேதி இரவு 9.15 மணிக்கு ஜாமீன் வழங்கினார். இந்த ஜாமீன் உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட்டு டிசம்பர் 22-ந்தேதி தடை விதித்தது.

    இந்த நிலையில், வக்கீல் சுனந்தாவின் கணவர் ஒரு மனு தாக்கல் செய்தார், அதில் “இந்த விபத்து வழக்கை ஐகோர்ட்டு கண்காணித்து வருகிறது என்று தெரிந்தும், சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் இரவு சுமார் 9.15 மணிக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்” என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரவு 9.15 மணிக்கு மாவட்ட நீதிபதி எப்படி ஜாமீன் வழங்கினார்? என்று கேள்வி எழுப்பினார்.

    ‘இரவு ஜாமீன் வழங்கியது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி விளக்கம் அளித்து விரிவான மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #HighCourt
    Next Story
    ×