search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சுளா- சரவணன்
    X
    மஞ்சுளா- சரவணன்

    மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

    மகனை கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படை உதவியுடன் தாய் கொலை செய்து பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதை தெரிந்துகொண்ட மஞ்சுளாவின் 10 வயது மகன் ரித்தேஷ் என்பவரை நாகராஜ், கடந்த மார்ச் மாதம் கடத்தி கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து, நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந்தேதி மாலை கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூலிப்படை உதவியுடன் நாகராஜை கொலை செய்ய மஞ்சுளா ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது.

    இந்நிலையில், நாகராஜ் கொலையில் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்ற நீதிபதி பஷீர் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். 5 பேரையும் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், அன்றைய தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    மகனை கொன்றவனை தீர்த்துகட்ட மஞ்சுளா முடிவு செய்தார். நாகராஜ் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் கொல்வதற்காக மஞ்சுளா துப்பாக்கி வாங்கினார். கடந்தவாரம் சைதாப்பேட்டை கோர்ட்டில் நாகராஜ் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்திருந்தார்.

    அப்போது நாகராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரை கொலை செய்வதற்காக கோர்ட்டுக்கு வெளியே துப்பாக்கியுடன் மஞ்சுளா காரில் காத்திருந்தார்.

    இதனையறிந்த நாகராஜ் தரப்பினர் அவரை சைதாப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் துப்பாக்கியுடன் காத்திருந்த மஞ்சுளாவை கைது செய்தனர்.

    அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மஞ்சுளாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கபட்டது. அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

    மஞ்சுளா அவரது நண்பர் தினேஷ்குமார், ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் மூலம் நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். கடந்த 24-ந்தேதி திங்கட்கிழமை நாகராஜ் சென்னையில் இருந்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு வந்தார். அதே பஸ்சில் தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் வந்தனர்.

    திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் உள்ள வீட்டிற்கு நாகராஜ் சென்றார். அங்கும் கும்பல் சென்றது.

    பின்னர் நாகராஜ் அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்த கும்பல் ஒரு நாள் முழுவதும் அவரை நோட்டமிட்டனர். மதிய நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அறிந்து அந்த நேரத்தில் கொலையை அரங்கேற்ற திட்டமிட்டனர்.

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை திரும்பிய கும்பல் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலைக்கு சென்றனர்.

    நாகராஜை கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். கிளிப்பட்டு என்ற இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பஸ்சில் வந்தவாசி சென்றுள்ளனர்.

    அங்கிருந்து புதுச்சேரி சென்று தங்கிவிட்டு சென்னை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    திருவண்ணாமலை டவுன் போலீசார் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகே கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.

    மகனை கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படை உதவியுடன் தாய் கொலை செய்து பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×