என் மலர்
செய்திகள்

கோவையில் நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை
கோவை:
கோவை பெரியகடை வீதி அருகே சாமி அய்யர் புது வீதி கே.சி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 44).
இவர் பெரியகடை வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 7 மணி அளவில் இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். பின்னர் இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்ற போது பீரோவை திறந்து மர்ம நபர்கள் 45 பவுன் நகையை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பெரியகடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு மாநகர மேற்கு சரக குற்றப் பிரிவு உதவி கமிஷனர் ராஜ்குமார்நவராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில் 2 இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகள் சிக்கியது.
கொள்ளை நடந்த வீட்டின் அருகே ஏராளமான வீடுகள், நகைபட்டறைகள் உள்ளன. வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.
இந்த மையத்தின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சி களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணேசன் வீட்டில் இருந்து குடும்பத்தினருடன் வெளியே செல்வதை கண்காணித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே அதேபகுதியை சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






