search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த இசக்கிமுத்து
    X
    தற்கொலை செய்த இசக்கிமுத்து

    கைதி தூக்கு போட்டு தற்கொலை- பாளை மத்திய சிறையில் நீதிபதி விசாரணை

    பாளை மத்திய சிறை வளாகத்தில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று நீதிபதி விசாரணை நடத்தினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 27), கூலித் தொழிலாளி. இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடுக்கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆனந்தி, தனது குழந்தையுடன் சீதபற்பநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இசக்கிமுத்து சீதபற்பநல்லூருக்கு சென்று குழந்தையை பார்த்தார். அப்போது, குழந்தையுடன் உடனடியாக வீட்டிற்கு வரும்படி ஆனந்தியிடம் இசக்கிமுத்து கூறினார். இதற்கு மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி இரவில் சீதபற்பநல்லூருக்கு இசக்கிமுத்து மீண்டும் சென்றார். இரவில் அங்கு தங்கினார். மறுநாள் காலையில் தூங்கி எழுந்த ஆனந்தி, தனது அருகில் படுத்து இருந்த குழந்தையையும், கணவர் இசக்கி முத்துவையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அய்யனார்குளத்தில் இருந்த இசக்கிமுத்துவை பிடித்து சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது குழந்தையை குளத்தில் கல்லை கட்டி வீசிக் கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் சிறை அறையில் இருந்து கைதிகள் திறந்து விடப்பட்டனர். அறையில் இருந்து வெளியே வந்த இசக்கிமுத்து, சிறை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தனது டவலை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மரத்தில் இசக்கிமுத்து பிணமாக தொங்கியதை பார்த்த மற்ற கைதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், ஜெயிலர் தர்மலிங்கம் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    இதுகுறித்து ஜெயிலர் தர்மலிங்கம் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து இசக்கிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இசக்கிமுத்து கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யாருடனும் பேசாமல் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனால் அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று நெல்லை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இதில் இசக்கிமுத்து தற்கொலை குறித்து யாரும் சந்தேகம் எழுப்பவில்லை. இதனால் இன்று அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
    Next Story
    ×