search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி - 2 பேர் கைது
    X

    40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி - 2 பேர் கைது

    போலி நிறுவனங்களை தொடங்கி ஜி.எஸ்.டி. வரி ரூ.40 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்த பின்னர், அதனை முறைப்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரியை கட்டுபவர்கள் முறையான ஆவணங்களை தாக்கல் செய்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு ஒன்று தனியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பிரிவு, ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

    அதிகாரிகள் நடத்திய ரகசிய விசாரணையில், சென்னை மற்றும் மதுரையில் போலியான நிறுவனங்களை நடத்தி ஜி.எஸ்.டி. வரியை தாக்கல் செய்தது போல கணக்கு காட்டி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரையில் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் இதில் 2 பேர் போலியான கம்பெனிகளின் பெயரில் பொருட்களை வாங்கியது போலவும், அந்த பொருட்களை கொண்டு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது போலவும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். ஒரு கம்பெனியை கூட தொடங்காமல் 30 கம்பெனிகளை தொடங்கி நடத்தியது போன்று கணக்கு காட்டியுள்ளனர். இதற்காக தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.220 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்தது போல கணக்கு காட்டியுள்ளனர்.

    தொழில் நிறுவனங்களின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு ஏற்ப தொழில் முனைவோர் உள்ளீட்டு வரி வரவை (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) திரும்ப பெற முடியும், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதன் அடிப்படையில் இந்த பணம் வரி வருவாயாக திரும்ப கிடைக்கும்.

    அந்த வகையில்தான் சென்னையை சேர்ந்த 2 பேர் ரூ.220 கோடி ஜி.எஸ்.டி. வரியை கட்டியதாக ஏமாற்றி ரூ.40 கோடி ரூபாயை மோசடியாக பெற்றுள்ளனர்.

    இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரையும் ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதன் பின்னணியில் மேலும் சிலர் உள்ளனர். வங்கி அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி. வரி மோசடியை தடுப்பதற்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஓசூர் ஆகிய 5 இடங்களில் தனித்தனியாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதுவையிலும் தனியாக ஒரு அலுவலகம் இயங்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அதுபோன்று செயல்படுபவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×