search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை அகற்ற ராணுவத்தை அனுப்ப வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி
    X

    புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை அகற்ற ராணுவத்தை அனுப்ப வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

    ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். #prpandian #gajacycloneeffected

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது;

    காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் கிராமப்புறங்களில் விழுந்த மரங்கள், கழிவுகள் முழுமையாக அப்புறப்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் கழிவுகளால் மாசடைந்து மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள், வயல்வெளிகளிலும், வாய்க்கால் கரைகளிலும் அமைந்துள்ளதால் இதனால் தொற்றுநோய் பரவி வருகிறது. காய்ச்சல், வயிற்றுப் போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக மன்னார்குடி வட்டம் கோட்டூர் நடுத்தெரு கிராமத்தில் காத்தான் மகன் பாண்டியன் (வயது 50) என்பவர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவரது மனைவி, மகன் வயிற்று போக்கு நோய் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கவேண்டும்.

    எனவே தமிழக அரசு விரைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கிராமப்புறங்களில் மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்கும், மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை தவிர்ப்பதற்கும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    துணை ராணுவப்படை மூலம் புயலால் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்தி விட்டு உடன் புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்கான பணிகளை அரசு தொடங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் எந்திரங்களை வரவழைத்து தென்னை விளை நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தமிழக தென்னை உழவர்கள் சங்கம் சார்பில் வருகிற 4-ந்தேதி பட்டுக்கோட்டை-அறந்தாங்கி முக்கத்தில் உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னாள் தென்னை வாரிய உறுப்பினர் குருவிக்கரம்பை பழனிவேலு தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #prpandian #gajacycloneeffected

    Next Story
    ×