search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுக்கு மாடி கட்டிடத்தில் தீவிபத்து- மாநகராட்சி கமி‌ஷனர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அடுக்கு மாடி கட்டிடத்தில் தீவிபத்து- மாநகராட்சி கமி‌ஷனர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

    சென்னை வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிட தீவிபத்து தொடர்பான வழக்கில் மாநகராட்சி கமிஷனர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மே 8-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மீனாட்சி, சந்தியா உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

    அந்த கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டிடத்தை இடிக்க கோரியும், அந்த கட்டிடத்தை கட்டுவதற்கு அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘விபத்து நடந்த கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டது. அந்த கட்டிடத்தில் பலர் குடியிருக்கின்றனர். கட்டிட உரிமையாளருடன், அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘அதிகாரிகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அந்த கட்டிடத்தை ஏன் இடிக்கவில்லை?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு மாநகராட்சி ஆணையர் நேரில் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் மத்திய மண்டல துணை ஆணையர் சுபோத்குமார் நேரில் ஆஜரானார். இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. மாநகராட்சி ஆணையர் ஏன் ஆஜராகவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால், ‘மாநகராட்சி ஆணையர் வேறு ஒரு பணியில் உள்ளார். அதனால், அவரால் ஆஜராக முடியவில்லை’ என்றார். அதற்கு நீதிபதிகள், ஆணையர் நாளை (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தீ விபத்து நடந்த கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் அடுக்கு மாடி கட்டிடத்தை இடித்தனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று இரவுக்குள் கட்டிடம் முழுவதும் இடிக்கப்படும் என்று தெரிகிறது.

    சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #MadrasHC
    Next Story
    ×