search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை விவகாரம் - புதுவையில் நாளை முழு அடைப்பு
    X

    சபரிமலை விவகாரம் - புதுவையில் நாளை முழு அடைப்பு

    சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டித்து நாளை புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. #SabarimalaIssue #BJP #Bandh
    புதுச்சேரி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கு கேரளாவில் பா.ஜனதா, காங்கிரஸ், இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சபரிமலையை சுற்றி உள்ள பகுதிகள் போராட்டக்களமாக மாறி உள்ளது.



    இந்த நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல கேரளா போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கத்தை விட குறைந்துள்ளது.

    சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்தும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரி‌ஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது என்றும், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பந்த் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பந்த் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியும் புதுவையில் பந்த் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. கேரளா மாநிலத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.

    இந்த பந்த் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். மேலும் சட்ட ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை பெரியார் சிலை அருகில் இருந்து பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஊர்வலம் சென்றனர்.

    அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் கொடுத்தபடி நகர பகுதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர்.

    முழு அடைப்பு குறித்து சாமிநாதன் கூறியதாவது:-

    இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். போராட்டத்திற்காக வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தொழிலாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் ஆதரவு கேட்டுள்ளோம். பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.

    இதனால் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காது. தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்காது. இதற்கு முன் புதுவையில் ஆளும் கட்சி தரப்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தேவையற்ற வி‌ஷயங்களுக்குக்கூட பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    இது, பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம். இதனால் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaIssue #BJP #Bandh

    Next Story
    ×