என் மலர்

  செய்திகள்

  கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் சொத்துவரியை 518 சதவீதம் உயர்த்துவதா? - ராமதாஸ்
  X

  கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் சொத்துவரியை 518 சதவீதம் உயர்த்துவதா? - ராமதாஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் சொத்துவரியை 518 சதவீதம் உயர்த்துவதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழ்நாடு முழுவதும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்ததை விட பல மடங்கு அதிகமாக சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களைச் சுரண்டும் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

  தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று விதி இருந்தாலும், 1998-ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்த ஆணையிட்டது.

  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் சொத்துவரியை விருப்பம் போல உயர்த்தியுள்ளன. சென்னையின் சில பகுதிகளில் சொத்து வரி 518 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

  சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் 958 சதுர அடி பரப்புள்ள தனி வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 390 ரூபாயிலிருந்து ரூ.2410 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான ஆண்டு சொத்துவரி 1100 ரூபாயிலிருந்து ரூ.3370 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 206 சதவீதம் உயர்வாகும்.

  ஆலந்தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கான சொத்துவரி 256 ரூபாயிலிருந்து ரூ.1480 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 478 சதவீதம் உயர்வாகும். சில இடங்களில் இதைவிட அதிகமாக சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வீடுகளுக்கான சொத்துவரியை ஒரே நேரத்தில் 518 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது எந்த அடிப்படையில் நியாயம் என்பது தெரியவில்லை. எந்த அளவீடுகளின் அடிப்படையில் சொத்துவரியை சென்னை மாநகராட்சி இந்த அளவு உயர்த்தியது என்பதும் தெரியவில்லை.

  அதேநேரத்தில் சிலருக்கு மட்டும் மிகக்குறைந்த அளவிலேயே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக் கோடம்பாக்கத்தில் 394 சதுர அடி பரப்பளவுள்ள தனி வீட்டுக்கு இதுவரை சொத்துவரியாக ஆண்டுக்கு ரூ.1802 வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இது ரூ.2020 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் 12 சதவீதம் உயர்வு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதேபோல் பல குடியிருப்புகளுக்கு குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரையிலும், வணிக நிறுவனங்களுக்கு 40 சதவீதம் வரையிலும் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்களுக்கு வரி குறைவாக உயர்த்தப்பட்டது என்பது ரகசியமாகவே உள்ளது. இவற்றை யார், எந்த அடிப்படையில் தீர்மானித்தனர் என்பது தெரியவில்லை.

  சொத்துவரி தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலை 23-ந்தேதி அறிவிப்பு வெளியானது.

  கடந்த ஏப்ரல் மாதம் முதல் பின் தேதியிட்டு இந்த வரி வசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால், பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து சொந்தப் பயன்பாட்டுக்கான வீடுகளுக்கான சொத்து வரி 50 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்படும் என்றும், பின்தேதியிட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து வசூலிக்கப்படாது என்றும், அக்டோபர் மாதம் முதல் தான் புதிய வரி வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

  ஆனால், தமிழக அரசின் அரசாணையை தமிழக அரசே மதிக்கவில்லை. அதிகபட்ச வரி உயர்வை விட 10 மடங்குக்கும் கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதம் முதல் பின்தேதியிட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

  நகர்ப்புற உள்ளாட்சிகளின் செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிக்க சொத்துவரியை ஓரளவு உயர்த்த வேண்டியது அவசியம் தான். ஆனால், அது மக்களைப் பாதிக்காவாறு இருக்க வேண்டும். மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் விருப்பம் போல சொத்து வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமானதாகும். மக்களை சுரண்டவும், கொள்ளை அடிக்கவும் ஓர் எல்லை உண்டு என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

  வீடுகளுக்கான சொத்து வரி 50 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்த தமிழக அரசு, அதை விட 10 மடங்குக்கும் மேலாக சொத்துவரியை உயர்த்தி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதை உணர்ந்து சொத்துவரி உயர்வை 50 சதவீதம் என்ற அளவுக்கு அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

  அதுமட்டுமின்றி, சொத்துவரியை உயர்த்தும் அரசின் முடிவை ஏதேனும் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தால் அவர்களை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பை மிகக் கடுமையாக கையாள வேண்டும். இதற்கு காரணமான அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டிக்க வேண்டும்.

  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

  Next Story
  ×