search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் பலத்த மழை: பேரிடர் மீட்புக்குழு முகாம் - சுற்றுலா தலங்கள் மூடல்
    X

    கொடைக்கானலில் பலத்த மழை: பேரிடர் மீட்புக்குழு முகாம் - சுற்றுலா தலங்கள் மூடல்

    கொடைக்கானலில் மழை நீடித்து வருவதால் பேரிடர் மீட்புக்குழு முகாமிட்டுள்ளது. #TNRain #RedAlert #NDRF

    பெருமாள்மலை:

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் இங்கு கடந்த சில நாட்களாக மழை நீடித்து வருகிறது. நேற்று மதியம் முதல் மழை வெளுத்து கட்டியது. சுமார் 5 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரமணாக கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீர் பழனி பகுதியில் உள்ள அணைக்கு வந்து சேருகிறது. அதோடு குடிநீர் வழங்கும் நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இந்த மழையால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைப் பாதையில் மச்சசூர் என்ற இடத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.


    கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் வெள்ளைப்பாறை என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேகமூட்டம் தொடர்ந்து காணப்பட்டதால் மலைப்பகுதியில் பகல் நேரத்தில் கூட இருள் போல் காணப்பட்டது. எனவே வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்கை போட்டபடி சென்றனர்.

    இன்று வாரவிடுமுறை என்ற போதும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. எனவே நகர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன மழை எச்சரிக்கை காரணமாக தொப்பி தூக்கும் பாறை, அமைதிச் சோலை, வாட்ச் டவர், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன.

    தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் இருந்து மீட்புக் குழுவினர் 20 பேர் கொடைக்கானல் விரைந்தனர். இவர்கள் பெருமாள் மலை பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களுக்குச் சென்று மீட்பு பணிகளை தொடங்க உள்ளனர்.

    கன மழை காரணமாக கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் காலனியில் கணேசன், சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்துள்ளது. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். #TNRain #RedAlert #NDRF

    Next Story
    ×