என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் அதிகாரி உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுத்தபடம்.
    X
    பெண் அதிகாரி உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுத்தபடம்.

    சின்னசேலம் அருகே லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக பெண் அதிகாரி சிறையில் அடைப்பு

    சின்னசேலம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் தாலுகா வி.அலம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 42). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் 30 சென்ட் நிலம் உள்ளது.

    இந்த நிலத்திற்குரிய சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய சின்னசேலம் தாலுகா அலுவலகத்துக்கு சுமதி சென்றார். அங்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஸ்வரி (39) என்பவரிடம் இதுபற்றி கூறினார்.

    அப்போது அவர் சிட்டா அடங்கலை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்து கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று சுமதியிடம் கேட்டார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுமதி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை சுமதியிடம் கொடுத்து அதை உமாமகேஸ்வரியிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மாலை சுமதி எடுத்துக்கொண்டு சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பெண் அதிகாரி உமாமகேஸ்வரியிடம் கொடுத்தார்.

    அவர் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு விரைந்து சென்று உமாமகேஸ்வரியை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Tamilnews
    Next Story
    ×