search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாநகரில் என்ஜினீயரை காரில் கடத்திய 4 பேர் கும்பல்
    X

    அண்ணாநகரில் என்ஜினீயரை காரில் கடத்திய 4 பேர் கும்பல்

    சென்னை அண்ணாநகரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்திவரும் என்ஜினீயரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அம்பத்தூர்:

    கொளத்தூர் ராஜன் நகரை சேர்ந்தவர் பிரமோத். என்ஜினீயரான இவர் அண்ணாநகர் டி பிளாக்கில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு பிரமோத் வீட்டுக்கு செல்ல அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அங்கிருந்த தனது காரில் ஏறிய போது 4 பேர் திடீரென்று அவரை தாக்கி காருக்குள் தூக்கி போட்டனர். அவரது வாயில் துணியை திணித்து கை, கால்களை கட்டி காருக்கு பின்னால் போட்டு கடத்தி சென்றனர்.

    கார் ஆவடியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கார் அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் நின்ற போது முன்னால் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காரில் இருந்த 4 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பிரமோத் தனது கால்களால் கார் கண்ணாடியை எட்டி உதைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டிகள், பொது மக்கள் காரை மடக்கினர். உடனே காரில் இருந்து 3 பேர் தப்பி ஓடினார்கள். ஒருவன் மட்டும் பொது மக்களிடம் சிக்கினான்.

    காரில் இருந்த பிரமோத்தை பொது மக்கள் மீட்டனர். அப்போது தன்னை 4 பேரும் தாக்கி கடத்தி சென்றனர் என்று கூறினார்.

    இதுகுறித்து பிரமோத் அண்ணாநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் ஓட்டேரியை சேர்ந்த ஜானகி ராமன் என்பதும், தப்பி ஓடியவர்கள் ஓட்டேரியை சேர்ந்த இம்ரான், பட்டாளத்தை சேர்ந்த பிரபாகரன், பிரான்சிஸ் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து தப்பி ஓடிய மற்ற 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் பிரமோத் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதால் அவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கும் என்று எண்ணி பணம் பறிக்க அவரை கடத்தியதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×