search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
    X

    பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 136.95 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 31.82 கன அடி நீர் வருகிறது. 2,200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. #PeriyarDam
    கூடலூர்:

    தேனி அருகே கேரள எல்லைப் பகுதியான லோயர் கேம்பில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. 155 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த சில வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதியில் மழை வெளுத்து கட்டி வருவதால் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 136.95 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 31.82 கன அடி நீர் வருகிறது. 2,200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது.

    இதனால் வைகை அணை நீர் மட்டம் இன்று 54.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும். அணை நிரம்பும் பட்சத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களுக்கு ஒரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும்.

    இந்த ஆண்டு ஓரளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு திறக்க வாய்ப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மஞ்சளாறு அணை நீர் மட்டம் 41.95 அடியாக உள்ளது அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 120.5 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 3 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பெரியாறு 6.2, தேக்கடி 4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 1. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #PeriyarDam
    Next Story
    ×