என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக கடல் சீற்றம் - வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
    X

    குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக கடல் சீற்றம் - வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-வது நாளாக கடல்நீர் சீற்றம் அதிகாமாக இருந்தது. ராட்சத அலைகள் கடற்கரையோரம் உள்ள வீடுகளை சூழ்ந்ததால் அச்சத்தில் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது கடல் சீற்றம் இருந்து வந்தது. சூறைக்காற்றும் அதிகமாக வீசியதால் ராட்சத அலைகள் எழும்பி வந்தன. கடல் சீற்றத்தின் காரணமாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு அவ்வப்போது முன் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் கடற்கரை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் மீனவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து விடாமல் இருக்க ஒருசில வீடுகளின் முன்பு மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்திருந்தனர்.


    கடல் சீற்றம் பற்றி தகவல் அறிந்ததும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அழிக்கால் கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்£ர். அப்போது மீனவர்கள் அவரிடம் தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் அழிக்கால் தூய அன்னை ஆலயம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுடன் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அழிக்கால் பங்கு தந்தை சோரிஸ், ஊர் தலைவர் ஜாண்சன் உள்பட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    போராட்டக்காரர்கள் அந்த வழியாக வந்த பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1½ மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்களிடம் போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உங்களது கோரிக்கைகள் குறித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (26-ந்தேதி) மாலை கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள், பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தப்படுமென்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நேற்றிரவும் கடல் சீற்றமாக காணப்பட்டதால் இரவு முழுவதும் மீனவர்கள் அச்சத்திலேயே தவித்தனர். இன்று காலையிலும் தொடர்ந்து கடல் சீற்றம் நீடித்தது. அழிக்கால் பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இந்த அலைகள் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்கும் புகுந்தது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    குளச்சல், முட்டம், கொட்டில்பாடு பகுதியிலும் அலையின் சீற்றம் வேகமாக இருந்தது. குளச்சலில் ராட்சத அலைகள் கடலுக்குள் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மீது 10 அடி உயரத்திற்கு மேலாக எழும்பியது.

    மார்த்தாண்டம் துறை, நீரோடி, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ள விளை, பூத்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாகவே காணப்பட்டது.
    Next Story
    ×