search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிசாலைக்கு நிலம் தரமறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்- பெண் உள்பட 5 விவசாயிகள் கைது
    X

    8 வழிசாலைக்கு நிலம் தரமறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்- பெண் உள்பட 5 விவசாயிகள் கைது

    செங்கம் அருகே பசுமை சாலைக்கு நிலம் தரமறுத்த 5 விவசாயிகளை போலீசார் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GreenwayRoad
    செங்கம்:

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக 5 மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கலசப்பாக்கம், செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கம் அடுத்த கட்ட மடுவு ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நில அளவிடும் பணியின்போது சில விவசாயிகள் தங்கள் நிலத்தை பசுமை சாலைக்காக தர மறுத்து அளவீடு பணியை தடுத்தனர். இதனால், தற்காலிகமாக அப்பகுதியில் நிலம் அளவிடும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.

    இந்த நிலையில், அத்திப்பாடி கிராமத்தில் விடுபட்ட அளவீடு பணியை தொடருவதற்காக தாசில்தார் ரேணுகா தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்றனர். விவசாயிகளின் எதிர்ப்பை முறியடிக்க டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    அப்போது அருள் என்ற விவசாயிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள மாந்தோப்பு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தகர்த்து எறிந்து அதிகாரிகளை போலீசார் உள்ளே அழைத்து சென்றனர். 10 ஏக்கர் மாந்தோப்பு மற்றம் மணிலா பயிரிடப்பட்டிருந்த நிலத்தை அளந்து குறியீடு கற்களை நட்டனர்.

    இதற்கு, அருள் உள்ளிட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசமடைந்த போலீசார் அருள் உள்ளிட்ட விவசாயிகளை அடித்து, உதைத்து தரதரவென இழுத்துச் சென்று மேல்செங்கம் போலீஸ் நிலையத்தில் சிறை வைத்தனர். பின்னர், அருள் மற்றும் மனோகரன், முத்துக்குமார், இந்திரா என்ற பெண், மற்றொரு மனோகரன் என மொத்தம் 5 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மற்ற விவசாயிகளை இரவில் விடுவித்தனர்.

    பசுமை சாலைக்காக நிலம் தர மறுத்த விவசாயிகளை போலீசார் தாக்கி கைது செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #GreenwayRoad
    Next Story
    ×