search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழப்பாவூர் பெரியகுளம் நிரம்பி காட்சி அளிக்கிறது
    X
    கீழப்பாவூர் பெரியகுளம் நிரம்பி காட்சி அளிக்கிறது

    நெல்லை மாவட்டத்தில் 150 குளங்கள் நிரம்பின- 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 150 குளங்கள் நிரம்பின. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. #NellaiRain
    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் 6 அணைகள் நிரம்பியுள்ளன. மழை காரணமாக தென்காசி சுற்றுபகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி மற்றும் சுற்றுவட்டரா பகுதியில் தென்காசி சீவலப்பேரிகுளம், கீழப்புலியூர், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, கம்பிளி, ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் உள்ளன. இதற்கு குற்றாலம் அருவி, குண்டாறு அணை, அடவிநயினார் அணை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பாசனம் பெற்று வருகின்றன.

    தற்போது இந்த பகுதி குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்னும் சில தினங்களில் அனைத்து குளங்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிற்றாற்றில் மேலப்பாவூருக்கு மேற்கே உள்ள தடுப்பு அணையிலிருந்து மேலப்பாவூர் குளத்திற்கும் கீழப்பாவூர் பெரிய குளத்திற்கும் தண்ணீர் வருகிறது. இந்த இரண்டு குளங்களும் பெருகிய பின்பு மருகால் வழியாக இதனை தொடர்ந்து நாகல்குளம், கடம்பன்குளம், தன்பத்து குளம், பூலாங்குளம், சின்னபூலாங்குளம், கோயிலுற்று குளம், ஆண்டிபட்டிகுளம் ஆகிய குளங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் இங்கிருந்து தொட்டியான் கால்வாய் மூலம் ஆலங்குளம் தொட்டியான் குளம் உட்பட 18க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கீழப்பாவூர் குளத்திலிருந்து வரும் தண்ணீர் தான் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் மூலம் பலஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேலப்பாவூர்குளம் மற்றும் கீழப்பாவூர் பெரிய குளம் முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2518 குளங்கள் உள்ளன. இதில் 1221 குளங்கள் கால்வரத்து குளங்களும், 1297 குளங்கள் மானாவாரி குளங்களும் ஆகும். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, சிவகிரி, களக்காடு, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு, அடவிநயினார், குண்டாறு ஆகிய 8 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது நெல்லை மாவட்டத்தில் சுமார் 150 குளங்கள் வரை நிரம்பி உள்ளது. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பெரியகுளங்களில் 2 மாதத்திற்கு போதுமான தண்ணீரும், சிறிய குளங்களில் 1 மாதத்திற்கு போதுமான தண்ணீரும் உள்ளது‘ என்றார். #NellaiRain
    Next Story
    ×