என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை லாட்ஜில் பிறந்த நாள் பார்ட்டியில் ரஷிய பெண் கற்பழிப்பா?- கைதான 5 பேரிடம் விசாரணை
    X

    திருவண்ணாமலை லாட்ஜில் பிறந்த நாள் பார்ட்டியில் ரஷிய பெண் கற்பழிப்பா?- கைதான 5 பேரிடம் விசாரணை

    திருவண்ணாமலை லாட்ஜில் பிறந்தநாள் கொண்டாடத்தில் ரஷிய பெண் கற்பழிக்கப்பட்டாரா என்பது தொடர்பாக கைதான 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் அபார்ட்மென்ட் உள்ளது.

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் 5 சிறிய வீடுகள் போன்ற வடிமைப்பில் இந்த அபார்ட்மென்ட் அமைந்திருக்கிறது.

    இந்த அபார்ட்மென்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 12-ந் தேதி அறை எடுத்து தங்கினார். தியான பயிற்சி தொடர்பான ஆய்வு செய்ய ஆன்மிக சுற்றுலா பயணியாக வந்திருப்பதாகவும், 10 நாட்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அபார்ட்மென்ட் நிர்வாகிகள் நீலகண்டன், அவரது தம்பி பாரதி ஆகியோர், நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் ரஷிய பெண்ணை செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அறையில் மயங்கிக் கிடந்தவரை காப்பாற்றி அழைத்து வந்ததாக டாக்டர்களிடம் 2 பேரும் தெரிவித்தனர்.

    ரஷிய பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவரது மார்பகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயமும், நகக் கீறல்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. எனவே, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார், அந்த பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான இந்த அபார்ட்மென்ட்டை லீசுக்கு எடுத்து நடத்தியதும், அனுமதியின்றி லாட்ஜாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    மேலும், ரஷிய பெண் மயக்கமடைந்தது குறித்து அபார்ட்மென்ட் நிர்வாகிகள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர் விசாரணையில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ரஷிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    எனவே, அபார்ட்மென்ட் நிர்வாகிகள் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடனந்தத்தைச் சேர்ந்த நீலகண்டன்(36) அவரது தம்பி பாரதி(30), இவர்களுடைய நண்பர்களான செங்கம் சாலையை சேர்ந்த மணிகண்டன்(37), பாலாஜி நகரைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் உத்தண்டி மகன் வெங்கட்(29), சிவா(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நேற்று காலை முதல் இரவு வரை தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் சரக டிஐஜி வனிதா, திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி ஆகியோர் நேற்று மாலை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து, கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் சுமார் 1 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து டி.ஐ.ஜி. வனிதா கூறியதாவது:-

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும் கைது உள்ளிட்ட மற்ற தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

    ஓட்டல் நடத்தி வரும் மணிகண்டனுடைய பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 14-ந் தேதி இரவு அபார்ட்மென்டில் மதுபான பார்ட்டி நடத்தியதும், அப்போது தனியாக தங்கியிருந்த ரஷிய இளம்பெண்ணுக்கு லெமன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    குளிர் பானத்தில் கலந்துகொடுத்த மயக்க மருத்தின் அளவு அதிகமானதால், நேற்று முன்தினம் வரை மயக்கம் தெளியாமல் இருந்துள்ளது. எனவே, அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். அப்போதும் மயக்கம் தெளியவில்லை.

    உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்தவர்கள், அறையில் மயங்கி கிடந்ததாக நாடகமாடி, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 பேரில் யார், யார் பாலியல் கொடுமையில் ஈடுபட்டது, அதற்கு உதவியவர்கள் யார் என்பது தெரியவில்லை. எனவே, கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ரஷிய பெண்ணுக்கு, நேற்று இரவு மயக்கம் தெளிந்தது.

    அவரிடம் ரஷ்ய மொழியும், ஆங்கிலமும் தெரிந்த, திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 2 பேரை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த கொடுமையான சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×