search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி 3-வது நாளாக தீவிரம்
    X

    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி 3-வது நாளாக தீவிரம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி இன்று 3-வது நாளாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த பேரணியின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கடந்த 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி, போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ஒருநபர் ஆணைய விசாரணையும் நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையமும் இதுபற்றி விசாரணை மேற்கொண்டது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குடோனில் இருந்து ரசாயன கசிவு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி கந்தக அமிலத்தை ஆலையில் இருந்து வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது.

    நேற்று அந்த பணி 2-வது நாளாக நடைபெற்றது. ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் ஜெனரேட்டர் மூலம் மின்வசதி ஏற்படுத்தப்பட்டு இந்த பணி நடைபெற்றது. மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டது. ஒரு லாரியில் தலா 25 டன் கந்தக அமிலம் நிரப்பப்பட்டன. முதல் கட்டமாக 4 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு கோவை மற்றும் சேலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    கந்தக அமிலம் அகற்றும் பணி இன்று 3 -வது நாளாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று கூடுதலாக டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. அந்த லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. கோவை, சேலம் மட்டுமின்றி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    எந்த தொழிற்சாலைகள் விருப்பப்பட்டு கேட்கிறார்களோ அந்த தொழிற்சாலைக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகளில் அனுப்பப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    கந்தக அமிலம் சேமிப்பு தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஏற்கனவே அடைக்கப்பட்டுவிட்டது என்றும், இப்பணிக்குப் பிறகு மற்ற ரசாயனங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை என்ன செய்வது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். அதன்படி கந்தக அமிலம் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே மற்ற ரசாயனங்கள் குறித்த ஆய்வு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×