search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க முயற்சி எடுக்க வேண்டும்- அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
    X

    அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க முயற்சி எடுக்க வேண்டும்- அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

    தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார். #TTVDinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை கடுமையாக எதிர்த்துவந்தார்கள். மேலும், 2016-ம் ஆண்டிலும், அணைகள் பாதுகாப்பு மசோதாவின் சில பிரிவுகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளதாகவும், அவற்றை எல்லாம் நீக்க வேண்டும் எனவும், அதுவரை அணைகள் பாதுகாப்பு மசோதாவின் 2016 வரைவை தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் முன்னெடுத்துச் செல்லக்கூடாது என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

    தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், மாநில உரிமைகளுக்கு அடிமேல் அடி விழுந்துகொண்டுதான் இருக்கிறது. இது தொடர்பாக, மேம்போக்காக அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவருவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முடிவை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும் என்று பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதி அதை பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியிட்டதோடு, தனது கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் மாநில உரிமைகளை, குறிப்பாக தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க முதலமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDinakaran
    Next Story
    ×