search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணத்துக்கு ஆசைப்பட்டு என்.எல்.சி. அதிகாரியை தீர்த்துக் கட்டிய நண்பர்கள்
    X

    பணத்துக்கு ஆசைப்பட்டு என்.எல்.சி. அதிகாரியை தீர்த்துக் கட்டிய நண்பர்கள்

    நெய்வேலியில் பணத்துக்கு ஆசைப்பட்டு என்.எல்.சி. அதிகாரியை தீர்த்துக் கட்டிய நண்பர்கள் குறித்து போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-17, கோவில் சாலையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55). இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அசோக்குமார் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் அசோக்குமாரை பல இடங்களில் தேடினர். அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து அசோக்குமாரின் அண்ணன் சதீ‌ஷன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக்குமாரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 19 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். அசோக்குமாரின் நண்பர் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அசோக்குமாரை அவரது நண்பர் சுரேஷ்குமார் மற்றும் வடலூரை சேர்ந்த ராஜேஷ் (36), நெய்வேலியை சேர்ந்த காமராஜ் (32) ஆகியோர் கடத்தி சென்று கொலை செய்து உடலை புதைத்திருப்பது தெரியவந்தது.

    மேலும் இந்த சம்பவத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த சித்தாலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (45) என்பவரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

    அதன்படி போலீசார் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான மீன் குட்டையில் புதைக்கப்பட்டிருந்த அசோக்குமாரின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், ராஜேஷ், மீன் குட்டை வைத்திருந்த இளங்கோவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட காமராஜை தேடிவருகின்றனர்.

    என்.எல்.சி. அதிகாரி கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    என்.எல்.சி. அதிகாரி அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் தனது நண்பர்கள் சுரேஷ்குமார், ராஜேஷ், காமராஜ் ஆகியோருடன் அடிக்கடி மது குடித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.

    அசோக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சுரேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் வேலை எதுவும் பார்க்காமல் சுற்றி திரிந்தனர். அசோக்குமாருடன் ஏற்பட்ட நட்பால் அவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி உள்ளனர்.

    அப்போது அசோக் குமார் தான் கடனாக கொடுத்த பணத்தை அவர் களிடம் கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அசோக் குமாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.

    மேலும் அசோக்குமாரின் வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் இருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது. அதனை அப கரிக்கவும் அவர்கள் திட்ட மிட்டனர். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அசோக்குமாரை அங்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தனர்.

    மது போதையில் இருந்த அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டு அபகரித்து, ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் மது மயக்கத்தில் இருந்த அசோக்குமாரை தாக்கினர்.

    மேலும் அசோக்குமாரின் முகத்தை செல்லோ டேப்பால் ஒட்டினர். இதனால் மூச்சுத்திணறி அவர் இறந்து விட்டார். பின்னர் அவரின் உடலை புதைக்க முடிவு செய்தனர். அப்போது அவர்கள் சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனிடம் தொடர்பு கொண்டனர். அவர் உடனே எனக்கு சொந்தமான மீன் குட்டை உள்ளது. அங்கு அசோக்குமாரின் உடலை புதைத்தால் யாருக்கும் தெரியாது என்றார். அதன் பேரில் இளங்கோவன் காரை எடுத்து கொண்டு அங்கு வந்தார்.


    பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த காரில் அசோக்குமாரின் உடலை ஏற்றி பெத்தான்குப்பத்தில் உள்ள மீன் குட்டைக்கு கொண்டு சென்றனர். அங்கு 12 அடி ஆழத்தில் குழி தோண்டி அசோக்குமாரின் உடலை புதைத்தனர். இதில் யாருக்கும் சந்தேகம் அடையாமல் இருக்க மீன் குட்டையை சுற்றிலும் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் போட்டு மூடினர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், ராஜேஷ், இளங்கோவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று மாலை நெய்வேலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதான 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 

    Next Story
    ×