search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    நெல்லை மாவட்டத்தில் சாரல் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    ராமநதி அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 1 மில்லி மீட்டர், அம்பையில் 2.2. மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவியில் இன்று சற்று கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இது போல அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணையில் இருந்து அனைத்து தண்ணீரும் பாபநாசம் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 205 கனஅடி தண்ணீர் வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.86 அடியாக உள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 34.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் அங்கு 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையில் குறைந்தபட்ச அளவான 19.68 அடியில் சகதி மட்டும் உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை சற்று உயர்ந்து 72.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது போல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.


    Next Story
    ×