search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திராவிட கட்சிகளால் தமிழகத்துக்கு முன்னேற்றம் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    திராவிட கட்சிகளால் தமிழகத்துக்கு முன்னேற்றம் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

    திராவிட கட்சிகளால் தமிழகத்துக்கு முன்னேற்றம் இல்லை என்று விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நேற்று மாலை பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. அணி சார்பில் சமதர்ம எழுச்சி மாநில மாநாடு நடைபெற்றது.

    எஸ்.சி.அணியின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.சி. அணி மாநில பார்வையாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி 6 கோடி கழிவறைகளை உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இதில் சரிபாதி கழிவறைகள் பட்டியல் இன குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு போய் சேர்ந்துள்ளது.

    இவர்களுக்கு கழிவறை கட்டிக்கொடுக்க திராவிட கட்சிகள் ஏன் முன்வரவில்லை? குறைந்த பட்சம் பள்ளிக்கூடங்களிலாவது கழிவறைகள் கட்டி கொடுத்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை. இந்த துரோகம் செய்த கழகங்கள் தான் நமது சமுதாயத்தை உயர்த்துவார்கள் என்று கனவு கண்டால் அது நடக்காது.

    தமிழகத்தில் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1½ கோடி கியாஸ் இணைப்புகள் பட்டியல் இன மக்களுக்காக மோடி கொடுத்துள்ளார். ஆனால் திராவிட கட்சிகள் எதையும் செய்யவில்லை. மோடியின் ஆட்சியில்தான் மக்கள் உயர்வை கண்டு வருகிறார்கள். இளைஞர்கள் படிப்புடன் தொழில் தொடங்க முத்ரா திட்டத்தை கொண்டு வந்து அதில் 40 சதவீதம் பட்டியல் இன மக்களுக்காக கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு நாம் வளர்ந்து காட்டுவது. தற்போது சிந்தை அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் மிகப்பெரிய பிரிவு ஏற்பட்டுள்ளது. திராவிட கழகங்களின் செயல்பாடுகள் கலவரங்களை ஏற்படுத்துவதற்கும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கும் வழிவகுக்கும் வகையில் உள்ளது.

    தமிழர்களை காப்பதிலும், பட்டியல் இன மக்களை உயர்த்தி காட்டுவதிலும் மோடி அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் இன்று ஒரு புறத்தில் நின்றுகொண்டிருக்கின்றன. உண்மையான எதிர்க்கட்சி என்றால் பா.ஜ.க.தான். வருகிற தேர்தல் கொள்கை, கோட்பாடு, சிந்தனை அடிப்படையிலும், வளர்ச்சியை கொடுக்கக்கூடிய தேர்தலாகவும் நடைபெற உள்ளது.

    அனைத்து சமூகமும் ஒன்று பட்டு நின்றால்தான் தமிழகம் முன்னேறும், தமிழ் சமுதாயம் முன்னேறும்.

    வரும் ஆண்டில் சுவாமி சகஜானந்தரின் 130-வது ஆண்டு பிறந்தநாள் விழா பட்டியல் இன மக்களின் வளர்ச்சி விழாவாக கொண்டாடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    அம்பேத்கருக்கு உண்மையாக புகழ் சேர்க்கும் ஒரே கட்சி பா.ஜனதாதான். இதை ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி நிரூபித்து வருகிறார். இந்த சமுதாயம் உயர்த்தப்பட வேண்டுமானால் தமிழக மக்கள் பா.ஜனதாவுக்கு அங்கீகாரம் தர வேண்டும். இந்த சமூகத்துக்காக உழைத்துக் கொண்டிருப்பதாக கூறும் திருமாவளவன் போன்ற சமூக தலைவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். இந்த மக்களுக்காக உதவி செய்யும் வகையில் ஏதேனும் திட்டங்களை கொண்டு வந்தீர்களா? ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் என்னென்ன திட்டங்களைகொண்டு வந்தோம் என்பதை எங்களால் பட்டியல் இட முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் காவிரி நமக்கு கிடைத்துள்ளது. காவிரிக்காக மு.க.ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் பொய்யான தோற்றம்தான். தமிழகத்தில் பா.ஜ.க.வால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை இந்த சமூகம் உணர வேண்டும். எந்த ஒரு திட்டமானாலும் அது மக்களுக்கு எதிரான திட்டமாக இருந்தால், அதை பா.ஜ.க. ஒத்துக்கொள்ளாது. தமிழகத்தில் காவிக்கொடி பறக்கும் காலம் வந்துவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    Next Story
    ×