search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை-திருப்பூர்-நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை
    X

    கோவை-திருப்பூர்-நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை

    கோவை-திருப்பூர்-நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. #rain

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை கொட்டியது. இதனால்தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தன. ஊட்டி மாநகராட்சி மார்க்கெட் தண்ணீரில் மிதந்தது.

    கோடப்பமந்து கால்வாய் நிரம்பி ஊட்டி மத்திய பஸ்நிலையம், ரெயில்வே பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியதால் கார், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. மேலும் பாலத்தை ஓட்டியுள்ள ரெயில்வே போலீஸ் நிலையம் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கோடைவிழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்க இருந்தது. இதற்காக 18 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் மழையால் அரங்குகளுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர்மழையால் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்தபடி சென்றனர். பலத்த மழை காரணமாக படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான லவ்டேவ் காந்திப்பேட்டை, கேத்தி, தலைகுந்தா, பைக்காரா, கல்லட்டி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதேபோல் கோவையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் கோவை உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்தது.

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 45). இவர் தனது நண்பரான அய்யப்பன் என்பவருடன் இணைந்து கியாஸ் கம்பெனி மற்றும் இடிகரைரோடு மகாராஜா நகரில் மர தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதையொட்டி இடிகரை ரெயில்வே கிராசிங் அருகில் ஒரு மரகுடோன் அமைத்திருந்தனர். அதில் மர தொழிற்சாலைகளில் தயாரிக்கும் கதவு, ஜன்னல் மற்றும் உதிரி பொருட்களையும் இருப்பு வைப்பது வழக்கம்.

    இரவு அந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென அந்த மர குடோன் மீது மின்னல் தாக்கியது. இதில் குடோனில் இருந்த மரப்பொருட்களின் மீது தீப்பற்றி எரிய தொடங்கியது.

    அக்கம் பக்கத்தினர் கோவை வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 2 ஆயிரத்து 400 மர கதவுகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு 1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

    திருப்பூரிலும் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடந்து சாரல் மழை பெய்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. #rain

    Next Story
    ×