என் மலர்
செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் தராவிட்டால் குமாரசாமி ஆட்சி நீடிக்காது: தனியரசு பேட்டி
ஒமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு எம்.எல்.ஏ., நிருபரிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் மிகுந்த துயரத்தோடும், துன்பத்தோடும் கடந்த 100 நாட்களாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100-வது நாள் அந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அமைதியாக மனுகொடுக்கும் நிகழ்வை அரசு முன்கூட்டியே உளவுத்துறை மூலம் கண்டறிந்து அந்த மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயரசம்பவம் நடந்திருக்காது. ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் அறவழி போராட்டத்தை நடத்திவந்தனர். இதில் 13 பேரை சுட்டு வீழ்த்திய இந்த தமிழக அரசு அந்த மக்களை கையாண்ட முறை வேதனையளிக்கிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு முதல்வர் தரும் இழப்பீடு குறைவானது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயிரை கொடுத்து உருவாக்கிய அரசு இந்த அ.தி.மு.க அரசு. தற்பொழுது பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து இனிமேல் இதுபோல சம்பவம் நடக்காது என உறுதி கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உறுதியளிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை குமாரசாமி கொடுக்கா விட்டால் அவருடைய அரசு நீடிக்காது, உச்சநீதிமன்றமும் கர்நாடக அரசுகுக்கு துணைபோனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை போல் வன்முறை போராட்டத்தை தமிழக மக்கள் கையில் எடுப்பார்கள். உலகத்திலேயே எந்த அரசும் பொதுமக்களுக்கு கொடுக்காத சுமையை மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு கொடுத்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை வரலாறு காணாத விலையேற்றத்தை மத்திய அரசு ஏற்றியுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட பெறமுடியாத சூழ்நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.






