search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிபா வைரஸ் பீதி-கடுமையான காய்ச்சலுடன் 2 வாலிபர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    நிபா வைரஸ் பீதி-கடுமையான காய்ச்சலுடன் 2 வாலிபர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடுமையான காய்ச்சலுடன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள 2 நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. #nipahvirus
    திருச்சி:

    கேரளா மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் ‘நிபா வைரஸ்’ காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட 12 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வவ்வால்கள் மூலம் பரவும் ‘நிபா வைரஸ்’ ஏற்பட்டால் பெரும்பாலானோர் இறந்து விடுவதாக கூறப்படுவதால் கேரளா மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் ‘நிபா வைரஸ்’ பரவுவதை தடுக்க எல்லை பகுதியில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் நடை பெற்று வருகிறது. மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கேரளாவில் சாலை அமைக்கும் பணிக்காக சென்ற திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கைகாட்டி, கார்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராசு மகன் பெரியசாமி (வயது 22) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கார்வாடி கிராமத்தைச் சேர்ந்த 20 பேரும் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் கேரளாவில் தங்கியிருந்து சாலை அமைக்கும் பணி செய்து வருகிறார்கள். அப்போது அவர்களுடன் இருந்த பெரியசாமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    காய்ச்சலுடன் கழுத்து வலி, தலைச்சுற்றல், வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு ஏற்பட்டு சுவாசிப்பதிலும் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் கேரளாவில் அவர்கள் தங்கியிருந்த இடத்திலேயே இருந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

    நேற்று கேரளாவில் இருந்து திருச்சி கார்வாடிக்கு அனைவரும் ஊர் திரும்பினர். இந்நிலையில் வீட்டில் இருந்த பெரியசாமிக்கு உடல்நிலை மோசமடைந்தது. சுய நினைவு இழந்தார். இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அவரை அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற பிறகு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பெரியசாமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தனிவார்டில் பெரியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கார்த்திக் என்ற மற்றொரு வாலிபரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என தகவல் வெளியானது.

    இது குறித்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டீன் அனிதாவிடம் கேட்ட போது, பெரியசாமி சளி, காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு ஏற்பட்டிருப்பது ‘நிபா வைரஸ்’ காய்ச்சல் தான் என்பது உறுதி செய்யப்பட வில்லை என்றும் தெரிவித்தார்.

    இருப்பினும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து சிகிச்சை வசதிகளும் இருப்பதால் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் கூறினார்.

    இதற்கிடையே பெரியசாமியின் ஊரைச் சேர்ந்த கார்வாடி, கைகாட்டி கிராம மக்கள் ‘நிபா வைரஸ்’ காய்ச்சல் பீதியில் உள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த பலர் கேரளாவிற்கு சென்று வந்ததால் தங்களுக்கும் பாதிப்பு இருந்து மற்றவர்களுக்கு பரவி விடுமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.

    எனவே தங்கள் கிராமத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தும்படி அப்பகுதி தாசில்தாரிடம் கிராம மக்கள் திரண்டு சென்று மனு கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உத்தரவின்படி மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் அப்பகுதிக்கு 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவை அனுப்பி வைத்தார்.

    மருத்துவ குழுவினர் கார் வாடி, கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரிசோதனை செய்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். யாரும் பீதியடைய வேண்டாம் என வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பீதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #nipahvirus 
    Next Story
    ×