search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் 10 ஆயிரம் கடைகள் அடைப்பு - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டங்களை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தூத்துக்குடியில் உள்ள 65 வியாபாரிகள் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், பிரைண்ட் நகர், திரேஸ்புரம், அண்ணாநகர் தெர்மல் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திரமரப்பட்டி, புதுக்கோட்டை, சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    சிறிய பெட்டி கடைகள், பால் பூத்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. பெரிய ஓட்டல்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மளிகை கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதி, பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. புதியம்புத்தூர் பகுதியிலும் பிரதான வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஓட்டப்பிடாரத்திலும் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்மபுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில் மினிபஸ்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் இன்று இயக்கப்படவில்லை.

    தூத்துக்குடி பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது படகுகள் கரையோரம் நிறுத்தபட்டுள்ளன. 
    Next Story
    ×